எமது நாட்டில் மலேரியா நோய் முற்றாக ஒழிக்கப் பட்டுவிட்ட போதிலும் இறக்குமதியாகின்ற மலேரியா நோயைக் அவ்வப்போது கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை உரிய முறையில் வழங்குவதற்குரிய சகல ஏற்பாடுகளையும் சுகாதார அமைச்சும் மலேரியா தடுப்பு இயக்கமும் சிறப்பான முறையில் முன்னெடுத்து வருகின்றது. 

நடுக்கத்துடன் காய்ச்சல் வந்தாலே, அது மலேரியா காய்ச்சல் தான் என்று நடுங்கிய ஒரு காலமும் இருந்தது. இன்று அந்த நிலை மாறி, எந்த சிகிச்சைக்கும் காய்ச்சல் குறையவில்லை என்கின்ற ஒரு நிலை வருகின்ற போது தான், அது மலேரியாவாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகின்ற நிலைக்கு அந்நோய் மாறிவிட்டது. ஆனால் அந்நோய் மாறவில்லை. நமது நாட்டிலிருந்து அந்நோயை, போலியோ என்ற இளம்பிள்ளைவாத நோயை இல்லாமலாக்கியது போன்று முற்றாக ஒழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில், நமது நாட்டின் அரசாங்கங்களும், அதன் கீழிருந்த சுகாதார அமைச்சும் திறம்பட செயற்பட்டதன் காரணமாகவே, அந்நோயை மறந்த நிலைக்கு கொண்டுவர முடிந்திருக்கிறது என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிராந்திய தொற்றுநோய்த் தடுப்பியலாளரும், பிராந்திய மலேரியா தடுப்பு இயக்க வைத்திய அதிகாரயுமான, வைத்திய கலாநிதி என். ஆரிப் தெரிவித்தார்.

“ மலேரியா இல்லாத இலங்கையை தொடர்ந்தும் உறுதி செய்ய உறுதி பூணுவோம்” என்ற அடிப்படையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பிராந்திய மலேரியா தடுப்பு இயக்கம் ஏற்பாடு செய்த மலேரியா ஒழிப்பும் ,மலேரியாவின்  மீள் புகுதலை தடுப்பது பற்றியதுமான பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான  விழிப்பூட்டல் செயலமர்வு  கடந்த சனிக்கிழமை(04) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.அலாவுதீன் தலைமையில்  பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடை பெற்றது.

வைத்திய கலாநிதி என். ஆரிப் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் எமது நாட்டில் இறுதியாக சுதேச மலேரியா நோய் இனங்காணப்பட்டது 2012 ஆம் ஆண்டிலாகும். அதற்குப் பிறகு சுதேச மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட யாரும் இனங்காணப்படவில்லை. அதற்குப் பிறகு ஏற்பட்ட மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம்இ அந்நோய் இன்னும் காணப்படுகின்ற நாடுகளுக்குப் பயணம் செய்து அங்கிருந்து அந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். அதாவது அதனை மீளப்புகுத்தப்பட்ட மலேரியா என்று அழைக்கப்படும். 
அவ்வாறான சந்தர்ப்பங்களில் கூடஇ அந்நோய் ஏனையவர்களுக்குப் பரவி ஒரு பேரழிவை உண்டாக்கி விடாமல் தடுப்பதற்குரிய காத்திரமான அனைத்து நடவடிக்கைகளையூம் சுகாதார அமைச்சும்இ அதன் கீழியங்கும் “மலேரியா நோய்த் தடுப்பு இயக்கம்” உம் இணைந்து மேற்கொண்டு வருகின்றது. அந்த செயற்பாட்டில்இ நமது நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் பங்காளிகளாக கைகொடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இந்நோயானது முற்றுமுழுதாகத் தடுக்கப்படக் கூடியதும்இ சிகிச்சை அளித்துக் குணப்படுத்தக் கூடியதுமாகும்.

இனிஇ மலேரியா நோய் பற்றிய சிறிய விளக்கத்தினைத் தெரிந்து கொள்வோம்.

உலகப் பரம்பல்

உலகிலே மலேரியா நோயினால் பாதிக்கப்படக் கூடிய 3.4 பில்லியன் சனத் தொகையிலேஇ 1.2 பில்லியன் மக்கள் இந்நோயினால் கூடியளவூ பாதிக்கப்படக் கூடியவர்களாகக் காணப்படுகின்றார்கள். இவ்வாறானவர்களில் 1000 பேர்களில் ஒருவருக்கு மலேரியா நோய் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. 2012 ஆம் ஆண்டில் மாத்திரம் 207 மில்லியன் மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததுடன் 627இ000 இறப்புக்களும் ஏற்பட்டிருந்தன. அவ்வாறு மரணித்தவர்களில் 482இ000 பேர் ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்களாகும். அதாவதுஇ நாளொன்றிற்கு 1300 சிறுவர்களாகவூம்இ சராசரியாக கிட்டத்தட்ட நிமிடமொன்றிற்கு ஒரு சிறுவர் வீதம் மரணித்தனர்.

தென்கிழக்காசியப் பரம்பல்

இப்பிராந்தியத்திலே 1.4 பில்லியன் மக்கள் இந்நோயினால் பாதிக்கபடக்கூடியவர்களாக இருக்கின்ற அதே நேரத்தில், 2012 ஆம் ஆண்டில் 27 மில்லியன் மக்கள் நோயினால் பாதிக்கப்பட்டும், 42,000 இறப்புக்களும் ஏற்பட்டிருந்தன. சார்க் நாடுகளைப் பொறுத்தமட்டில், பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் இந்நோய் இன்னும் அதிகளவில் காணப்படுவதுடன், பங்களாதேஸ், நேபாளம் மற்றும் பட்டான் ஆகிய நாடுகளில் இந்நோய் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாலைதீவிலும், இலங்கையிலும் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை நிலவரம்

மலேரியா நோயானது இலங்கையின் பல பிரதேசங்களை பல சந்தர்ப்பங்களில் உலுக்கிய வரலாறுகளை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. 1934 – 1935 இடைப்பட்ட காலப்பகுதியில் 15 இலட்சம் மக்களைத் தாக்கியும், 80 ஆயிரம் பேரைக் காவூகொண்டுமிருந்தது. உலகில் மலேரியா நோயை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையின் பயனாக, 1960 களில் இலங்கையிலும் கிட்டத்தட்ட அந்நோயை இல்லாதொழித்த நிலை காணப்பட்டது. எனினும், அதற்குப் பிறகு ஏற்பட்ட தோல்விநிலை காரணமாக மீண்டும் சில தசாப்தங்கள் மலேரியா நோயின் தாக்கம் மேலோங்கியிருந்தது.

இருந்தபோதிலும், பல்வேறுபட்ட முயற்சிகளின் காரணமாக, 1991 ஆம் ஆண்டில் அந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை நான்கு இலட்சத்திலிருந்து 2012 நவம்பர் மாதத்தில் பூச்சியத்தை எட்ட முடிந்திருக்கிறது. 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவரை எவரும் மலேரியா நோயினால் மரணிக்கவில்லை. அதுவும்மூன்று தசாப்தங்களாக நமது நாட்டை உள்நாட்டுப் போர்ச்சூழல் சூழ்ந்திருந்த போதும், இந்த நன்நிலையை அடைய முடிந்திருக்கின்றது. இதற்காக மலேரியா தடுப்பு இயக்கத்தைச் சேர்ந்த பலர் அந்நோய்க்காளாகி தமது உயிர்களைக் கூடத் தியாகம் செய்திருக்கிறார்கள்.

அன்றிலிருந்து இன்றுவரை சுதேச மலேரியா நோயினால் எவரும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை. ஆயினும், இன்னும் அந்நோய் காணப்படுகின்ற நாடுகளுக்குப் பயணித்து விட்டு, மீண்டும் இங்கே வந்த சிலர் அந்நோயினால் பீடிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறானவர்களை உரிய நேரத்தில் இனங்கண்டு உரிய சிகிச்சைகளை வழங்கியதன் காரணமாக பேராபத்துக்களை இன்றுவரை தவிர்க்க முடிந்திருக்கின்றது.

இந்த நிலையைத் தொடர்ந்தும் தக்க வைப்பதற்கு, தகவல் தொலைத்தொடர்பு சாதனங்களில் கடமையாற்றுகின்றவர்கள், குறிப்பாக ஊடகவியலாளர்கள் மக்கள் மத்தியில் தொடரேச்சியான விழிப்புணர்வை மேற்கொள்வதற்கு மிகுந்த பங்களிப்பை வழங்கக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்.

மலேரியா நோய் எதனால் உண்டாகின்றது?

பலரும் மேலோட்டமாகத் தெரிந்து வைத்திருப்பது போல, அந்நோயானது நுளம்பினால் உண்டாக்கப்படுவதில்லை. மலேரியா நோயானது பிளாஸ்மோடியம் எனப்படுகின்ற ஒருவகைக் கிருமியினாலேயே உண்டாக்கப்படுகின்றது. பிளாஸ்மோடியம் பல்சிபாரம், பிளாஸ்மோடியம் வைவக்ஸ், பிளாஸ்மோடியம் ஓவாலே, பிளாஸ்மோடியம் மலேரியே எனப்படுகின்ற நான்கு வகையான கிருமிகள் பிரதானமானவையாகும். இவற்றுள் பிளாஸ்மோடியம் பல்சிபாரத்தினால் ஏற்படும் மலேரியா நோய் பயங்கரமானது. சரியான சிகிச்சை வழங்கப்படாவிட்டால், குறுகிய காலத்தினுள் மரணத்தை அல்லது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
குறிப்பிட்ட கிருமிகளின் வாழ்க்கை வட்டத்தின் ஒரு பகுதி நுளம்பினுள்ளும், ஒரு பகுதி மனிதரினுள்ளும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மலேரியா நோய் எவ்வாறு பரவுகின்றது?
அந்நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து, அந்நோய்க்கான காரணியான கிருமிகளை இன்னொருவருக்கு பரப்புகின்ற ஒரு காவியாகவே நுளம்புகள் செயற்படுகின்றன. எல்லா நுளம்புகளும் இதற்குக் காரணமல்ல. மற்றொரு உயிர்க்கொல்லி நோயான டெங்கு நேயைப் பரப்புவதற்கு ஏடீஸ் எனப்படுகின்ற ஒருவகை நுளம்புகள் காரணமாக இருப்பது போல, மலேரியா நோய்க்கான காரணியைப் பரப்புவதற்கு அனோபிலிஸ் எனப்படுகின்ற ஒரு வகை பெண் நுளம்புகளே காரணமாக இருக்கின்றன. இவை அதிகமாக, இரவு  நேரங்களிலேயே குறிப்பாக மாலை மற்றும் அதிகாலை நேரங்களிலேயே மனிதர்களை குத்துகின்றன. தனது உணவுத் தேவைக்காக பாதிக்கப்பட்டவரை நுளம்புகள் குத்தி இரத்தத்தை உறிஞ்சுகின்ற போது அதனோடு சேர்ந்து உள்வாங்கப்படும் கிருமிகளை அந்நுளம்புகள் வேறொருவரைக் குத்துகின்ற போது, அவருடைய உடம்பினுள்ளே குறித்த கிருமிகள் உட்புகுத்தப்படுகின்றன.
கர்ப்பகாலத்தின் போது தாயிலிருந்து சிசுவுக்கும், இரத்தம் பாய்ச்சுவதன் மூலமாகவும்  உடலுறவின் போது மர்ம ஸ்தானங்களில் இரத்தத் தொடர்பு வருமளவிற்கான காயங்கள் மூலமாகவும் ஒருவரிடமிருந்து இன்னொருவரிற்கு அந்நோய் பரவலாம். வேறு எந்த விதமாகவும் அந்நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. 

மலேரியா நோயின் குணங்குறிகள்
நடுக்கத்துடனான காய்ச்சல் - இது தொடர் காய்ச்சலாக இல்லாமல் விட்டு 
        விட்டுக் காய்கின்ற காய்ச்சலாக இருக்கும்.
தலையிடி
உடம்பு நோவும், பலவீனமும்
வாந்தி
இருமல்
வயிற்றுப்போக்கு
வயிற்று நோவு 

சரியான முறையில் சிகிச்சை கிடைக்காத போது
மயக்கம்
வலிப்பு
மூச்சுத் திணறல்
சிறுநீரக இயக்கம் பாதிப்பு
மஞ்சட்காமாலை
குருதிச்சோகை

சிறுவர்களில்
உண்ணாமை
வாந்தி
ஒருநிலைத்தன்மை இன்மை

மலேரியா நோயைக் கண்டறிவது எப்படி?
தகவல்களின் அடிப்படையில் அநுமானித்தல்
இரத்தப் பரிசோதனை மூலமாகவே அந்நோய் உறுதிப்படுத்தப்படும்.
 அதற்காக பலவிதமான பரிசோதனை முறைகள் காணப்படுகின்றன.

குறிப்பாக, அந்நோய் முற்றாக ஒழிக்கப்படாத நாடுகளுக்குப் பயணித்து வந்த பிறகு, காய்ச்சல் ஏற்பட்டால் மலேரியா நோய்க்கான பரிசோதனையும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

சிகிச்சை

நமது நாட்டில் மலேரியா நோய் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்ட போதிலும், இறக்குமதியாகின்ற மலேரியா நோயை அவ்வப்போது கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சைகளை உரிய முறையில் வழங்குவதற்குரிய சகல ஏற்பாடுகளையும் மலேரியா தடுப்பு இயக்கம் சிறப்பான முறையிலே முன்னெடுத்து வருகின்றது.
அந்நோயானது இன்னும் காணப்படுகின்ற இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியன்மார் மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு பயணம் செய்கின்றவர்கள் முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டிய மருந்துகளை இலவசமாக ஆதார மற்றும் அதற்கு மேற்பட்ட வைத்தியசாலைகளிலும், பிராந்திய மற்றும் கொழும்பு மலேரியா தடுப்பு இயக்க அலுவலகங்களிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

தடுப்பு நடவடிக்கைள்

மருந்துகளைப் பாவித்தல்
நுளம்புக்கடியிலிருந்து பாதுகாத்தல்
நுளம்புகள் பெருகும் இடங்களை இல்லாமலாக்குதல்

நோபல் பரிசு

மலேரியா நோய் சம்மந்தமான செயற்பாடுகளை முன்வைத்து நான்கு பேர் நோபல் பரிசுகளையும் பெற்றுள்ளார்கள்.
1) சேர் றொனால்ட் றொஸ் (1902)
2) சார்ல்ஸ் லூயிஸ் அல்பொன்சி லெவரன் (1907)
3) ஜூலியஸ் வெக்னர் ஜோரெக் (1927)
4) போல் ஹேர்மான் முல்லர் (1948)

இன்றைய முக்கியத்துவம்

நமது நாட்டிலிருந்து முற்றாக மலேரியா நோயை ஒழித்துவிட்ட நிலையில், “மலேரியா இல்லாத இலங்கை” என்ற சான்றிதழை உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து பெறவேண்டியுள்ளது. அதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து உலக சுகாதார நிறுவனமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. சான்றிதழை வழங்குவதற்கு முன், அவர்கள் இலங்கைக்கு வந்து, மலேரியா நோயைக் கட்டுப்படுத்துவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைளைப் பரிசீலிப்பார்கள். ஆகவே, அதற்காக நாட்டுமக்களாகிய அனைவரும் மலேரியா தடுப்பு இயக்கத்துக்கும், அது எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

கூடிய கவனம் செலுத்தப்படவேண்டியவர்கள்

அந்நோய் காணப்படுகின்ற நாடுகளுக்கு வர்த்தக நோக்கங்களுக்காகப் பயணிக்கின்றவர்கள்.
அத்தகைய நாடுகளில் அமைதிப்படையில் கடமையாற்றிவிட்டு வருகின்ற படைவீரர்கள்.
இந்தியா, மியன்மார் போன்ற நாடுகளுக்குப் பயணிக்கின்ற யாத்திரிகர்கள்.
ஆபிரிக்கா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு உல்லாசமாக அல்லது வேலைவாய்ப்புக்காகச் சென்று வருகின்றவர்கள்.
அத்தகைய நாடுகளில் இருந்து தொழில் நிமித்தம் இலங்கைக்கு வருகின்றவர்கள்.
அத்தகைய நாடுகளினூடாக பயணித்து வருகின்ற ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மியன்மார் போன்ற நாடுகளிலிருந்து வருகின்ற அகதிகள்.      

பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய முக்கியமான செய்திகள்
வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார ஊழியர்கள்: வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட தகவலோடு காய்ச்சல் ஏற்பட்ட நோயாளர்களுக்கு மலேரியாவுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டு, உரிய நேரத்தில் அந்நோயைக் கண்டறிந்து உரிய சிகிச்சைகளை வழங்குதல்.
வெளிநாட்டவர்கள்: நீங்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், உடனடியாக உங்களைப் பரிசோதனைக்குட்படுத்தி, உங்களையும் காத்துக் கொண்டு, ஏனையவர்களுக்கும் அந்நோய் பரவாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
வெளிநாடுகளுக்குப் பயணிக்கின்ற இலங்கையர்கள்: பயணிப்பதற்கு முன்னர் முன்னெச்சரிக்கை சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். நுளம்புக்கடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை இரவு  நேரங்களில் வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அவசியம் செல்ல வேண்டுமாயின் நீளமான மேலங்கிகளை அணிந்து கொள்ளுங்கள். நாடு திரும்பியவுடன் மலேரியா நோய்க்கான பரிசோதனையைச் செய்து கொள்ளுங்கள். நாடு திரும்பிய ஆறு மமாதங்களுக்குள் காய்ச்சல் ஏற்பட்டால் வைத்திய அதிகாரிகளிடம் உங்களின் பயணம் பற்றிய தகவலைத் தெரியப்படுத்தி அந்நோய்க்கான பரிசோதனையையும் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என வைத்திய கலாநிதி என். ஆரிப் மேலும் தெரிவித்தார். 

யூ.எம்.இஸ்ஹாக்  

கருத்துரையிடுக

 
Top