இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுதாபம் 

முன்னாள் மேல் மாகாண ஆளுனரும், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி முன்னாள் அமைச்சருமான மர்ஹ{ம் அலவி மௌலானாவின் இழப்பு முஸ்லிம் சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
அலவி மௌலான அவர்கள் தனது அரசியல் பணியை தொழிற்சங்கவாதியாக ஆரமபித்து தொழிலாளர்களின் உரிமைக்காகவும், இனங்களுக்கிடையில் பலமான ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் பல தசாப்தங்களாக பாடுபட்ட தலைசிறந்த மூத்த அரசியல் தலைவர். குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, டாக்டர் பதியுதீன் மஹ்மூத் போன்ற பெரும் தலைவர்களுடன் இணைந்து முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதில் முன்னின்றவர். அவர் முஸ்லிம் சமூகத்துக்காக ஆற்றிய சேவைகள் ஒருபோதும் மறக்க முடியாதவை. 
அவர் நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்த காலப்பகுதியில் முஸ்லிம்கள் மக்களது தேவைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியவர். குறிப்பாக மாவனல்லை கலவரம் ஏற்பட்ட போது அப்பகுதி மக்களது பாதுகாப்பு – பொருளாதாரத்தை மீள் கட்டியெழுப்பல் போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்தியிருந்தார். 
ஆகவே, இவரது இழப்பு முஸ்லிம் சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். எனவே, அவரது ஈருலக வெற்றிக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். அத்துடன், அவரது இழப்பினால் துயர் அடைந்துள்ள பிள்ளைகள், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 

கருத்துரையிடுக

 
Top