மருதமுனை மக்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சில தீய சக்திகள் பிழையான வதந்திகளைப் பரப்பி ஏனைய சமூகங்களுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையில் பிளவை எற்படுத்த முயற்சிக்கின்றனர்.
இதன் அடிப்படையில் மருதமுனை ஆட்டிறைச்சிக் கடைகளில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சியையும் கலந்து விற்பனை செய்ததாக ஆதாரமற்ற செய்திகள் முக நூல்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.
இவ்விடையம் தொடர்பில் பரவிவரும் வதந்திககளின் உண்மைத் தன்மையை அறியும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட கல்முனை வடக்கு இறைச்சி விற்பனையாளர் கூட்டுறவுச் சங்க(மருதமுனை)பிரதிநிதிகளுக்கும் மருதமுனை பிரதேச புத்திஜீவிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(12-05-2016)மாலை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது பிழையாகப் பரப்பப்பட்டு வரும் வதந்தி தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்ட போது  தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள்; காரணமாக  தனிநபர்கள் சிலர் திட்டமிட்டு முகநூலில் இவ்வாறான பிழையான தகவல்களை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட முகநூல் நபர்களை மருதமுனை ஜூம்ஆ பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் குழு விசாரணை செய்து அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பது என இன்று நடைபெற்ற இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மட்டுப்படுத்தப்பட்ட கல்முனை வடக்கு இறைச்சி விற்பனையாளர் கூட்டுறவுச் சங்க(மருதமுனை)பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில் நாங்கள் மிக நீண்ட காலமாக பரம்பரையாக இறைச்சி விற்பனை செய்து வருகின்றோம் 
நாங்கள் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு அமைவாக உண்மையாகவும் நேர்மையாகவும் இந்தத் தொழிலைச் செய்து வருகின்றோம் எங்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களே எங்களைப்பற்றி பிழையான வதந்திகளைப் பரப்பி வருகின்றனர் எனத் தெரிவித்தனர்.

இங்கு வருகை தந்திருந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பைசால் முஸ்தபா  கருத்துத் தெரிவிக்கையில் மருதமுனை பிரதேசத்தில் அறுக்கப்படுகின்ற மாடுகளும்,ஆடுகளும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் பூரண பரிசோதனைகளின் பின்னர் கல்முனை மாநகரசபை அனுமதித்துள்ள நிலையங்களில் மட்டுமே அறுக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தினார்.
இந்த சந்திப்பில் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி,கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்,இஸட்.ஏ.எச்.றஹ்மான்,சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ஜெமீல். மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலின்ன் தலைவரும் ஊடகவியலாளருமான எம்.எல்.எம்.ஜமால்தீன், மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசளின் தலைவரும் கல்முனை முஸ்லிம் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.சக்காப், மருதமுனை அல்-மதீனா வித்தியாலய அதிபர் ஏ.ஆர்.நிஹ்மத்துல்லா மட்டுப்படுத்தப்பட்ட கல்முனை வடக்கு இறைச்சி விற்பனையாளர் கூட்டுறவுச் சங்க(மருதமுனை)தலைவர் பி.எம்.அபுல் ஹுதா ஆகியோரும் கருத்துக்களைத் தெரிவித்தனர். 
இந்த சந்திப்பில் மருதமுனை பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள்,அதிபர்கள் ஆசிரியர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

 
Top