நட்பிட்டிமுனையில் நடமாடும் சமுர்த்தி வங்கி சேவை ஆரம்பிக்க திவிநெகும  திணைக்கள அதிகாரிகள் இணக்கம். அதன் அடிப்படையில் இம்மாதம் தொடக்கம் வாரத்தில் இரண்டு நாட்கள் நடமாடும் வங்கி சேவை நட்பிட்டிமுனையில் நடை பெறவுள்ளது.

நீண்ட காலமாக இயங்கி வரும் மருதமுனை நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கி கிளையை பிரித்து தனியான வங்கி கிளை ஒன்றை நட்பிட்டி முனையில் அமைக்குமாறு நற்பிட்டிமுனை சமுர்த்தி உதவி பெறுவோரினால் கோரிக்கை விடப் பட்டு வந்தது .

இந்த விடயம் தொடர்பாக விளையாடுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீசிடமும்  சமுர்த்தி உதவி பெறுவோர் கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கை பிரகாரம் பிரதி அமைச்சர் ஹரீஸ் திவிநெகும திணைக்களத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் . அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது. நட்பிட்டிமுனையில் உள்ள வறிய  மக்கள் தங்களின் சமுர்த்தி வங்கி நடவடிக்கைகளுக்காக பல சிரமப் பட்டு பல ரூபாய்களை செலவு செய்து மருதமுனைக்கு சென்று வருகின்றனர் . அக்கிராம மக்களின் கஷ்ட நிலையை உணர்ந்து நட்பிட்டிமுனையில் சமுர்த்தி வங்கி ஒன்றையோ அல்லது  வங்கி உப அலுவலகம் ஒன்றையோ அல்லது வங்கி நடமாடும் சேவை ஒன்றையோ பெற்றுக் கொடுக்குமாறு கேட்கப் பட்டிருந்தது .

அதன் அடிப்படையில் இந்த விடயத்தை கண்டறியும் கூட்டம் நற்பிட்டிமுனை அல் - அக்ஸா மகா வித்தியாலய மண்டபத்தில் நேற்று நடை பெற்றது. கல்முனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்  ஒருகிணைப்பில் கல்முனை பிரதேச செயலாளர் ஏ.எச்.முகம்மட் கனி தலைமையில்  இந்தக் கூட்டம் நடை பெற்றது. அம்பாறை மாவட்ட திவி நெகும திணைக்களப் பணிப்பாளர் சந்துருவன் அனுருத்த, திவி நெகும தலைமைக் காரியாலயத்தில் இருந்து வருகை தந்த மாவட்ட திவிநெகும இணைப்பாளர் ஐ.அலியார் உட்பட வங்கி முகாமையாளர்கள்,திவிநெகும உத்தியோகத்தர்கள் ,நகர திட்டமிடல் நீர் வழங்கல்  வடிகாலமைப்பு அமைச்சின் இணைப்பாளர் யு.எல்.எம்.தௌபீக் உட்பட சமுர்த்தி உதவி பெறும் குடும்பத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நட்பிட்டிமுனையில் சமுர்த்தி வங்கி ஒன்றை தனியாக அமைப்பதில் சட்ட சிக்கல் இருப்பதாக அங்கு அதிகாரிகளினால் கூறப் பட்டது . அதாவது தனி வங்கி அமைப்பதாக இருந்தால் இரண்டாயிரம் வாடிக்கையாளர்கள் இருக்க வேண்டும் ஆனால் அவ்வாறான் தொகையினர் இல்லாததன் காரணத்தினால் அது சாத்தியப் படாது எனவும் நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் உப அலுவலகம் இயங்கவில்லை எனவும் அங்கு தெரிவிக்கப் பட்டது. எனினும் நடமாடு சேவையை ஆரம்பித்து வாரத்தில் இரண்டு நாட்கள் சேவை வழங்க அதிகாரிகள் இணக்கம் தெரிவித்தனர் .

அங்கு வருகை தந்த சமுத்தி பயனாளிகள் இதனை ஏற்க மறுத்தனர். எங்களுக்கு தனியான வங்கியே வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்த போது வங்கி நிறுவுவதற்கு ஆரம்பக் கட்டமாக இந்த நடமாடும் சேவையை ஏற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகளால் நியாமான காரணங்கள் கூறப் பட்டதன் காரணமாக இறுதியில் நடமாடும் வங்கி சேவையை பயனாளிகள் ஏற்றுக் கொண்டனர் . அதன் அடிப்படையில் வாரத்தில் இரண்டு நாள் நடமாடு சமுர்த்தி வங்கி சேவை இம்மாதத்தில் இருந்து அமுல் படுத்தப் படவுள்ளது.
கருத்துரையிடுக

 
Top