தெ.கி.அ.ச.சே.நிறுவனத்தின் தலைவர் அப்துல் ஜப்பார் சமீம் அறிக்கை

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையானது எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியினை கைப்பற்றுவதற்கு உரமாக அமையும் என தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனத்தின்  ஸ்தாபகத் தலைவரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான அப்துல் ஜப்பார் சமீம்  தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவு  தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது :-மிகக் குறுகிய காலத்திற்குள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அபார வளர்ச்சியடைந்திருப்பதானது அதன் தலைமை மீது மக்கள் கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையினை வெளிக்காட்டியுள்ளது.
இரண்டாயிரமாம் ஆண்டில் பெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் மரணித்ததன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸூக்கு இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆகும்.பெரும் விருட்ஷமாக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று ஆறு ஆசனங்களை மாத்திரம் பெற்றிருப்பதானது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிப் போனது.        
அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸானது 33.000 வாக்குகளைப் பெற்று சுமார் 2000 வாக்குக் குறைவினால் ஒரு ஆசனத்தை இழந்திருப்பதானது அடுத்த வெற்றிக்கான அத்திவாரமாகும்.இதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் பல உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை பெறுவதற்கான வேலைத் திட்டங்கள் இலகுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது புதிய தேர்தல் வியூகம் ஒன்றினை வகுத்து கிழக்கின் ஆட்சி அதிகாரத்தினை தீர்மானிக்கும் சக்தியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விளங்கும் என்பதில் சநதேகமில்லை.
நடந்து  முடிந்த தேர்தலின் உற்சாகம் குறையுமுன் முஸ்லீம்கள் பெரும் பான்மையாக வாழும் அனைத்துப் பிரதேசங்களிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுக்களை நிறுவி கட்சியை பலப்படுத்த கட்சியின் உயர் பீடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top