நாளை நடை பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக திகாமடுள்ள மாவட்டத்தில் சகல ஏற்பாடுகளும் பூர்தியடைந்த நிலையில்  அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திலிருந்து  சகல வாக்குப் பெட்டிகளும் தேர்தல் கடமைகளுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் எடுத்துச் செல்லப் பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்கள் யாவற்றிலும் நாளை வாக்களிப்பதற்காக தயார் நிலையில் உள்ளதை அவதானிக்க முடிகின்றது. வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளதுடன் பொலிஸாரின் வீதி ரோந்து சேவைகளும் இடம் பெற்று வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
திகாமடுள்ள மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் நான்கு தொகுதிகளிலும் 4 இலட்சத்து 65 ஆயிரத்து 757 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்
இவர்கள் வாக்களிக்கவென  464 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திலின விக்ரமரட்ன தெரிவித்தார்.
இதன்படி அம்பாறை தேர்தல் தொகுதியில் 161999 வாக்காளர்களும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 80357 வாக்காளர்களும், கல்முனைத் தேர்தல் தொகுதியில் 71257 வாக்காளர்களும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 152147 வாக்காளர்களும்   வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை தொகுதியில்  160 வாக்களிப்பு நிலையங்களும் சம்மாந்துறைத் தொகுதியில்  87 வாக்களிப்பு நிலையங்களும் கல்முனைத் தொகுதியில் 66 வாக்களிப்பு நிலையங்களும் பொத்துவில் தொகுதியில்  151 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திலின விக்ரமரட்ன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை  தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கவென  உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது 
கருத்துரையிடுக

 
Top