VC இன் விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மூக்குடைந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என 

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி துல்கர் நயீம் தெரிவித்துள்ளார் அண்மையில் மருதமுனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் 
முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சார மேடைகளில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் VC.இஸ்மாயில் வெற்றி பெற்றாலும் பாராளுமன்றம் செல்லமுடியாது சில சட்டச்சிக்கல்கள் உள்ளன என்று பகிரங்கமாக கூறி வருகின்றார், ஏன் இந்த ஆற்றாமை. சட்டத்தில் முதுமானி பட்டம் பெற்ற இவர் VC இன் விடயத்தில் சட்டச்சிக்கல் உள்ளது என கூறுவது நகைப்புக்குரியது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் ஒரு பொறுப்புள்ள கட்சியின் தலைவர் என்றவகையில் சமூகத்தில் பாரிய விளைவை ஏற்படுத்தக்கூடிய விடையங்களை கையாளும்போது அதுபற்றி தீர ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை விளங்கி மக்கள் முன் வெளிப்படுத்த வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மாபெரும் எழுச்சியும், வேட்பாளராக களமிறங்கியிருக்கும் கலாநிதி இஸ்மாயிலின் பின்னால் சம்மாந்துறை மக்களின் அணிவகுப்பையும்  பார்க்கும்போது முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி தங்கள் கண்களின் முன்னாலேயே வேருடன் சாய்வதை கட்சியின் உள்ளூர் தலைமைகளினாலும் தீவிர ஆதரவாளர்களினாலும்  ஜீரணிக்க முடியவில்லை. கட்சியின் தலைமையும் கதிகலங்கிப்போய் பேசுவதற்கு தரவுகள் இல்லாமல் மேடைகளில் உளறுவதையே காண முடிகின்றது.  இவரது இந்த உளறலின் உச்சகட்டமாக  மேடைகளில் தன்னை அறியாமலே VC இன் வெற்றியைப் பற்றியும்  அவ்வாறு வெற்றி பெற்றாலும் பாராளுமன்றம் செல்வதில் சட்டச்சிக்கல் உள்ளது என்றும் நயவஞ்சகதனமாக  பேசுகின்றார்.  தான் பேசுவது வடிகட்டிய பச்சை பொய் என தெரிந்தும் பகிரங்கமாக மேடையிலே உளறுகின்றார். இவ்வாறு பேசுவதன் மூலம் சம்மாந்துறை மக்களை மடையர்களாக்கி VC இன் பக்கம் அணிதிரளும் மக்களின் ஆதரவை தடுத்து நிறுத்தலாம் என்று கனவு காண்கிறார். .
இவருடைய இந்த பேச்சை சம்மாந்துறை மக்கள் மட்டுமல்ல காக்கை கூட கவனத்தில் எடுக்கவில்லை.
 கலாநிதி இஸ்மாயில் ஒன்றும் சாமானியர் அல்ல. தேர்தலில் போட்டியிட தீர்மானித்த உடனே இலங்கையில் முதுபெரும் சட்டத்தரணியாக திகழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களின் ஆசானாகிய சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களை சந்தித்து கலாநிதி இஸ்மாயில் அவர்கள் சட்ட ஆலோசனைகள் பெற்று அவர் கூறியபடி தனது விரிவுரையாளர் பதவியில் இருந்து தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகின்ற ஒருவர் எந்த அடிப்படியில் சட்ட ரீதியாக ஓய்வுபெற வேண்டுமோ அந்த அடிப்படியிலே சகல நடவடிக்கைகளையும் எடுத்த பின்னரே வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கலாநிதி இஸ்மாயில் இறங்கினால் மிகப்பெரும் மாற்றம் சம்மாந்துறையில் மட்டுமல்லாமல் முழு அம்பாறை மாவட்டத்திலும் ஏற்படும் என்ற காரணத்தினாலேயே வேட்பு மனு தாக்கல் செய்கின்ற வேளையிலேயே கச்சேரியில் வைத்து முஸ்லிம் காங்கிரஸின் மூத்த தலைவர்களும் வேட்பாளர்களும்  இந்த பிரச்சினையை திட்டமிட்டு எழுப்பினார்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரசின்  வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டுமென ஒரே பிடியில் நின்றார்கள். ஆனால் திடமான உறுதியுடன் எதற்குமே அஞ்சாத கலாநிதி இஸ்மாயில் அவர்கள் உடனடியாக தனது பல்கலைக்கழக பதிவாளரிடம் இருந்தும் தேர்தல் ஆணையாளரிடம் இருந்தும் தான் தேர்தலில் போட்டியிடுவதற்காக முறைப்படி விண்ணப்பித்த உரிய ஆவணங்களை தொலைநகல் மூலமாக பெற்றுக்கொடுத்தார்.  தன்னிடமிருந்த முக்கிய ஆவணங்களையும் உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். அதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் வேண்டுகோளை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்ததுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டனர் . அதன் பின்னர் முகம் கறுத்துப்போன முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களும் மூத்த தலைவர்களும் தங்கள் தோல்வி அன்றே உறுதியாகிவிட்டதாக தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டதையும் எம்மால் அறிய முடிகின்றது.
இதையும் மிஞ்சி தேர்தல் களத்தில் மிக வேகமாக VC இன் செல்வாக்கு அதிகரித்து செல்லும் அதேவேளை யானை சின்னத்திலே போட்டியிடும் 3 முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களும் தோல்வி அடைவது உறுதி ஆகிவிட்டதால் சுதாரித்துக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஒன்றுமில்லாத VC இன் விடயத்தை கோட்டுக்கு கொண்டு சென்றிருப்பதன் மூலம் மக்களை திட்டமிட்டு குழப்பி அதன்மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீதான ஈடுபாட்டை குறைக்கலாம் என்று நினைக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க கலாநிதி இஸ்மாயிலை தங்கள் பக்கம் இழுத்தெடுப்பதற்கு ஆரம்பத்திலிருந்தே பல்வேறு முயற்சிகளையும், தந்திரங்களையும்  கையாண்ட இவர்கள் இறுதியிலே தோல்வியைத்தான் சந்தித்தார்கள். ஆனால் கலாநிதி இஸ்மாயில் தான் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றம் செல்லவேண்டும் என்பதை விடவும் ஒரு சிறந்த தலைமைத்துவத்தையும் கட்சியையும் அம்பாறை மாவட்டத்திலே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்தார். அந்த அடிப்படையிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரசிலே அவர் இணைந்து கொண்டார். இவருடைய  இணைவிலே நானும் ஒரு முக்கிய பாத்திரம் என்பதால் இவருடைய அரசியல் நுழைவிலும் நகர்விலும் காத்திரமான பங்களிப்புக்களை வழங்கி இந்த பாராளுமன்றத் தேர்தலிலே நீண்ட காலமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து தவிக்கும்  சம்மாந்துறை பிரதேச மக்களுக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்று முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
 முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அம்பாறை மாவட்டத்திலுள்ள அதிகளவான வாக்குகளை கொண்ட பிரதேசங்களுக்கு வெறும் போலி வாக்குறுதிகளையே வழங்கி வருகின்றது. இதனால் இக்கட்சியின் பொடுபோக்குத்தனமான அரசியல் செயற்பாடுகளினாலும் அக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகளின் சோம்பேறித்தனமான மக்கள் சேவையினாலும் வெறுப்படைந்துள்ள மக்கள் தங்களுக்கு அரசியல் ரீதியான விடிவொன்று ஏற்படவேண்டுமென்று அவா கொண்டிருந்த வேளையில் நாம் அழகான திட்டமிடலுடன் அரசியல் அதிகாரங்கள் அற்ற பிரதேசங்களுக்கு அதிகாரங்களை பெற்றுக்கொடுக்கும் யுக்தியுடன் உலகின் தலை சிறந்த தலைவர்களுள் ஒருவராக மதிக்கப்படுகின்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை அம்பாறை மாவட்டத்தில் இம்முறை பாராளுமன்ற தேர்தலிலே களத்தில் இறக்கியிருக்கின்றோம்.
ஏனைய முஸ்லிம் தலைமைத்துவங்களுடன் ஒப்பிடும் போது முனாபிக் தனமும் நயவஞ்சக தனமும் ஏமாற்றுதலும் பித்தலாட்டமும் அறவே இல்லாத நமது பக்கத்து வீட்டு சகோதரனைப் போன்ற தோற்றமுடைய இவரை இன்று நாடளாவிய ரீதியில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஹீரோவாகவே பார்க்கின்றனர். தனது சமூகத்திற்காக எதையும் போராடி பெற்றுக்கொடுக்கும் போராட்ட குணமும் எந்த விடயத்தையும் சாதுர்யமாக சாதிக்கக் கூடிய ஆற்றலும் உள்ள இவரை நமது பிரதேச மக்களும் மாபெரும் எழுச்சிமிக்க ஒரு தலைவராக வரவேற்பதை மறுக்கமுடியாது. 
இதனால்முஸ்லிம்களின் ஏக கட்சியாக நமது சமூகத்திலே புரையோடிப்போயுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதை வளர்த்தவர்களின் கையாலேயே துடைத்தெறியப்படும் நிலையில் உள்ளது. ஆம்! அம்பாறை மாவட்டத்திலே யானை சின்னத்திலே போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 3 போட்டியாளர்களும் படுதோல்வி அடைவார்கள் என்பதை நடுநிலையுடன் சிந்திக்கக்கூடிய அரசியல் அவதானிகள் தெளிவாக கூறுகின்றார்கள். இதனால் பித்துப்பிடித்துப் போயுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் கண்டபபடி உளறுகின்றது. VC.இஸ்மாயில் வெற்றி பெற்றாலும் பாராளுமன்றம் செல்லமுடியாது என்று கூறுகின்றார். அப்படிச்சென்றால் தான் காதை அறுத்துக்கொள்வதாகவும் கூறுகின்றார். நாம் அவரை காதை அறுக்கச் சொல்லவில்லை. அது அல்லாஹ் அவருக்கு வழங்கிய அருள், அவ்வாறு சவாலுக்காக காதை அறுத்துக்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கவும் இல்லை. இதுகூட தெரியாத ஒரு தலைவராக இருக்கின்றார்.
இவருடைய இந்த கோழைத்தனமான பேச்சுக்கு கலாநிதி இஸ்மாயில் எதிர் சவால் விட்டிருக்கின்றார். “நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று விட்டால் றஊப் ஹக்கீம் அரசியலை விட்டு ஒதுங்கி வீடு செல்வாரா?” என்று ஆணித்தரமாக கேட்டிருக்கின்றார். இதற்கு றஊப் ஹக்கீமின் பதில் என்ன? வீடு செல்லுவாரா? இல்லையா? VC இன் இந்த சவாலை ஏற்றுக்கொண்டால் பகிரங்கமாக மக்கள் முன் இந்த சவாலை ஏற்றுக்கொள்ளட்டும் அதை விட்டுவிட்டு காதை அறுப்பேன் என்பதெல்லாம் சுத்தப் பேத்தல்,
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அவர்களே! நீங்களும் உங்கள் வேட்பாளர்களும் போகின்ற ஊர்களில் எல்லாம் ஏறுகின்ற மேடைகளில் எல்லாம் VC பாராளுமன்றம் செல்ல முடியாது என்கிறீர்கள். உங்களுடைய பொய் பிரச்சாரங்களை முறியடித்து VC தான் போட்டியிடும் மயில் சின்ன கட்சியூடாக அமோகமான விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றம் செல்வது நிச்சயம் என்பதை நாங்கள் ஆணித்தரமாகவும், உறுதியாகவும் தெரிவித்துக்கொள்வதோடு எதிர் வரும் 18 ஆம் திகதி உங்கள் முகத்திரைகள் கிழித்தெறியப்பட்டு இத்தனை நாள் நமது மக்களை பொய்யும் புரட்டும் சொல்லி ஏமாற்றிக்கொண்டிருந்த நீங்கள் அசிங்கப்பட்டு அவமானப்படுவது உறுதி. 18 ஆம் திகதி எந்தவொரு பிரதிநிதித்துவத்தையும் பெற்றுத்தராது மக்கள் உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் “குட் பாய்” சொல்வது நடக்கும்.நீங்கள் விதைத்ததை நீங்களே அறுவடை செய்வீர்கள், அதன் பின் அகில இலங்கை மக்கள் காங்கிரசே மக்கள் மனதில் என்றென்றும் வீற்றிருக்கும்.இது நம்மைப் படைத்தவனின் தீர்ப்பு,

கருத்துரையிடுக

 
Top