முன்னாள்  போராளிகள் கட்சியினரை உதாசீனம் செய்து, பொதுத் தேர்தலில் வேட்புமனு வழங்க மறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை அகில இலங்கை மக்கள் ஜனநாயகக் கட்சி நிறைவேற்றியுள்ளது. 

அகில இலங்கை மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் அதி உயர் பீடக் கூட்டம் கட்சியின் தலைவரும், பிரபல தொழிற்சங்கவாதியுமான எஸ்.லோகநாதன் தலைமையில் கல்முனை சணச மண்டபத்தில் நேற்று  சனிக்கிழமை நடைபெற்றது.

 புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் ஜனநாயக நீரோட்டத்தில் ஊன்றிக் கால்வைக்கும் வண்ணம் 'ஜனநாயகப் போராளிகள்' எனும் பெயரில் கட்சி ஒன்றை ஸ்தாபித்துள்ளமை குறித்து கூட்டத்தில் வரவேற்புத் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை, இம்முறை பொதுத் தேர்தலில் போராளிகள் சிலருக்காவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடமளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும், அக்கோரிக்கையை ஏற்காது கூட்டமைப்பு உதாசீனம் செய்தமைக்கு இக்கூட்டத்தில் பலத்த கண்டம் தெரிவிக்கப்பட்டது. 

கண்டனத் தீர்மானம் ஒன்றும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தக் கண்டனத் தீர்மானத்தின் மீது சங்க ஆலோசகரும் கிழக்கு மாகாண பிரசித்த நொத்தாரிஸ்மார் சங்க பொருளாளருமான சீ.வரோதயன், கட்சி தவிசாளர் பி.விக்கிரமசிங்கம், கட்சியின் செயலாளர் நாயகம் ஐ.எம்.இப்ரா லெவ்வை ஆகியோரும் உரையாற்றினர்.

 போராளிகள் கட்சி தேர்தலில் சுயேச்சையாகக் களமிறங்குமிடத்து, அகில இலங்கை மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் வடக்கு சென்று அவர்களுக்காகப் பிரசாரக் களத்தில் குதிப்பர் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இம்முறை பொதுத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் ஜனநாயகக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதில்லையெனவும் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

கருத்துரையிடுக

 
Top