முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்கல்முனைத் தொகுதிக்கு ஹரீஸ் வேண்டுமா என்பதை தொகுதி மக்கள் மிகவிரைவில் தீர்மானிப்பார்கள் என முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கல்முனை நியூஸ்  இணையத்திடம் கூறினார்.இதுதொடர்பில் அவர் கூறுகையில்,


முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் எத்தகைய பதவிகளையும் எதிர்பார்க்காமலேயே கடந்த காலங்களில் நான் செயற்பட்டுவந்தேன். பாராளுமன்றத்தில் 15 வருடங்கள் அங்கம் வகித்துள்ளேன். கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினராக நானும் இருக்கிறேன்.


எனக்கு பதவி கிடைக்கவில்லை என்பதற்காக நான் ஒருபோதும் ஊர் மக்களை குழப்பவில்லை.  தூண்டிவிடுகின்ற பிற்போக்குத்தனமான அரசியலை நான் செய்யவும் இல்லை. கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகளில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. இந்த ஹரீஸுக்கு பதவி கொடுங்கள் என கட்சித் தலைமையிடம் மகஜர் கையளியுங்கள் என ஒருபோதும் மக்களை  நான் தவறாக வழிநடத்துவுமில்லை.


இருந்தபோதும் கல்முனைத் தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களிடத்தில் ஹரீஸ் என்பவர் வாக்கு பெற்றுக்கொடுக்கும் ஒரு இயந்திரமா என்ற நியாயமான கேள்வி மேலோங்கியுள்ளது. ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து, என்னால் முடிந்த பல வேலைத்திட்டங்களை கல்முனைத் தொகுதிக்கும், அம்பாற மாவட்டத்திற்கும் செய்துள்ளேன். எனக்கு வாக்ளித்த மக்கள் என்னிடமிருந்து சேவைகளை எதிர்பார்ப்பது நியாயம்தான். எனினும் இந்த சேவைகளை ஹரீஸ் இன்னும் செய்யலாம், முஸ்லிம் காங்கிரஸ் இதற்கு எப்போதும் உறுதுணையாக நிற்க வேணடுமென்ற எதிர்பார்ப்பு எனது ஆதரவாளர்களிடத்தில் காணப்படுகிறது.
கடந்த 15 வருடங்களாக என்னை பாராளுமன்றத்திற்கு  அனுப்பிவரும் மக்கள் இவ்வாறு எதிர்பார்ப்பது எந்த தவறும் இல்லை. இங்கு நான் மக்களின் உணர்வுகளை மதிக்கிறேன். அதுபோன்று கட்சியும், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் இதனை புரிந்துகொள்ள வேண்டுமென்பதுதான் எனதும், என்னுடைய ஆதரவாளர்களினதும் எதிர்பார்ப்பாகும்.
தற்போது  ஹரீஸ் அமைதியாக இருக்கிறான். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் நான் எத்தகைய முடிவையும் எடுக்கவில்லை. கல்முனைத் தொகுதி முஸ்லிம் காங்கிஸ் ஆதரவாளர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பொது அமைப்புக்கள் உள்ளிட்டவர்களே இனி எனது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள். அவர்கள் விரைவில் ஒரு தீர்மானத்திற்கு வரலாம். அந்த தீர்மானத்தின் அடிப்படையில் எனது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடரும் எனவும் ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top