எம்.எச்.சேகு இஸ்ஸதீன் 

கூர்மை அடைந்து செல்லும் இனவாத அரசியல் கெடுபிடிகளுக்கு ஈடு கொடுத்து, இரண்டாவது சிறுபான்மை சமூகமாக இருக்கும் முஸ்லிம்களின் சமநல உரிமைகளை வென்றெடுத்துப் பதிவு செய்து கொள்வதற்காக, அனைத்து முஸ்லிம்களையும் ஒரே அரசியல் கொடியின் கீழ் இணைத்துக்கொள்ளும் வகையில் முஸ்லிம் காங்கிரஸ் சகல முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கோடு எல்லா மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிட்டு ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தவிசாளரும், முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் நிலை தொடர்பாக கேட்டபோது மேற்படி தெரிவித்தார்.
விமர்சனத்திற்குரிய மஹிந்தவின் ஆட்சியை வெளியேற்றுவதில் வெற்றி கண்டு, விடியலை தொடக்கி வைக்கும் நல்லாட்சிக்கான முயற்சிகள் அரையும் குறையுமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர் கொள்ளவந்துள்ள இந்தப் பொதுத் தேர்தலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
திடுக்கிடவைக்கும் பல திருப்பங்களை தன்னகத்தே மூடி மறைத்திருக்கும் இந்தத் தேர்தலை ஒரு களைக்கூத்தாடியின் நிதானத்தோடும் தீவிர தியாக சிந்தையோடும் எதிர்கொண்டு சிறுபான்மைச் சமூகங்களின் சம அந்தஸ்துக்கான கோரிக்கைகளை சாத்வீகமான முறையில் வென்றெடுக்கும் வழிவகைகளிலும் உபாயங்களிலும் சிரத்தையோடு செயற்படவேண்டும். தனித்துவத்தை கட்டியெழுப்பும் தளராத முயற்சிகளை தாராளமயப்படுத்தி சகல முஸ்லிம்களையும் ஒரே அரசியல் அமைப்பின் கீழ் வழிநடாத்திச் செல்வதற்கான ஆரம்பப் போராட்டமாக இந்த பொதுத் தேர்தலை முஸ்லிம் காங்கிரஸ் அணுக வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தின் தேவைகள் திசை மாற்றப்பட்டிருந்த போதும் இன்று முஸ்லிம்கள் இலங்கையில் எதிர்கொண்டுவரும் நிலை அன்றைக்கு இருந்ததைப்போல ஒரு வித பயங்கரவாதத்திற்கு ஒப்பானதாகவே இருக்கிறது.

இந்த விடயத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்களின் உரிமைக்குரலாக வடிவமைக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ்  இன்று வழக்கொழிந்து போனது போல் இருப்பினும் அதனைத் துடைந்து துப்பரவாக்கி வெளிச்ச வீடாக இலங்கவைக்கவேண்டியது இன்றைய கால கட்டத்தின் அறைகூவலாகும். எனவே இடையில் இருக்கின்ற சொற்ப நாட்களை முற்றாகப் பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரசை மொத்த முஸ்லிம்களின் சப்த உரிமைக்குரலாக வெளிப்படுத்தி தேர்தலுக்கு முகம் கொடுக்கவைக்க முஸ்லிம் காங்கிரசின் புத்திப் போராளிகள் செயற்பட முன்வரவேண்டும்.

இப்போதைக்கு எந்தக் கட்சியோடும் இணைந்து தேர்தலில் இறங்காமல் சுயமாக சொந்தக்காலில் நின்று சகல மாவட்டங்களிலும் மரச்சின்னத்தில் போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் முனைப்போடு செய்றபடவேண்டும்.

எந்தக்கட்சி ஆட்சிக்கு வரும் என்பதில் இப்போதைக்கு ஈடுபாடு காட்டாமல் ஆட்சி அமைக்க சாத்தியம் பெறும் கட்சியோடு முஸ்லிம் சமூகப்பிரச்சினைகளுக்கான முறையான சுமுகமான தீர்வை உறுதிப்படுத்தி ஆட்சியை பலப்படுத்துவதன் மூலம் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்தநேரம் கூட்டு சேர முடியும். இப்போது முஸ்லிம்களின் தனித்துவத்தை கட்டியெழுப்பி பலப்படுத்துவதுதான் நம் கையில் உள்ள விடயமாகும் என மேலும் தெரிவித்தார்.

Post a Comment

 
Top