கதிர்காம புனிதத் தலம் நோக்கி இலங்கையில் பல்வேறு இடங்களிலுமிருந்து பாத யாத்திரை மேற்கொள்ளுவது மரபாக அன்று தொட்டு இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வகையில் மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் பாதயாத்திரை சங்கம் முதல் நிலை பெறுகின்றது.
இதனை ஆரம்பித்து வைத்தவர் சடையப்பா சுவாமிகள் ஆவார். ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் பாதயாத்திரை சங்கத்தின் ஏற்பாட்டில் இவ்வருட கதிர்காம யாத்திரையானது முதலாம் கட்டம் இன்று 02 ஆம் திகதி மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் பேராலயத்தில் இருந்து கால்நடையாகப் புறப்பட்டது.

மறுகட்டம் 04 ஆம் திகதி சனிக்கிழமை புறப்படும் பாத நடையாகும். மூன்றாம் கட்டமாக 06 ஆம் திகதி திங்கட்கிழமை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் தங்கி 07-07-2015 காலை 7.00 மணிக்கு பஸ் மூலம் புறப்பட்டு திருக்கோயில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஏற்கனவே புறப்பட்ட கூட்டங்கள் அனைவரும் இணைந்து ஒன்றாகி புறப்பட்டு 17.07.2015 கதிர்காமம் சென்றடையும். பாண்டிய நாட்டின் தென்கீழ்த் திசையில் திருச்செந்தூரும், ஈழநாட்டின் தென்கீழ்த் திசையில் கதிர்காமமும் அமைந்துள்ளது. தேரவாத பௌத்தத்தின் நிலைக்களனாக விளங்கும் இத் தீவில் பௌத்த மக்களையும், இந்துக்களையும் கவர்ந்திழுக்கும் அருள்மிகு திருத்தலமாக கதிர்காமம் விளங்குகின்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச் சிறப்புக்களுமுடைய தாய்ப் புராண வரலாற்றுச் சிறப்புக்கள் கொண்டமைந்தது. வெளிநாட்டவரையும் திருவருளால் தன்னகத்தே ஈர்ந்து விளங்கும் திருத்தலம் கதிர்காமமாகும். இத்தலம் இலங்கையின் தென்பாகத்தே ஊவா மாகாணம் தெற்கே முடிவடையும் எல்லையில் தியனகம என்ற காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கிராமம் பெரும்பாலும் காடடர்ந்ததாகவே காட்சி அளிக்கிறது. தரையானது அம்பாந்தோட்டைப் பகுதியில் கடல் சார்ந்த நெய்தல் நில சம தரையாகவும் மேலே செல்லச் செல்ல காடு சார்ந்த முல்லை நிலமாகவும்,  வடக்கே செல்ல மலைசார்ந்த குறிஞ்சி நிலமாகவும் காட்சியளிக்கிறது.

குறிஞ்சி நிலப்பாங்கும்,  குமரவேல் உறை குன்றும் “சேயோன் மேயமைவரை உலகமும்” எனப் பழந்தமிழ் நூலாம் தொல்காப்பியம் கூறும் இலக்கணத்திற்கமைந்து விளங்குவது கதிர்காமத்தலமாகும்.

கதிர்காமம் என்பதன் பொருளைப் பார்ப்போமாயின் கதிர் என்பது ஒளி அதாவது முருகக் கடவுள் ஒளி வடிவில் காமமாகிய இருப்பிடத்தில குடி கொண்டுள்ளார் எனப் பொருள்படும். அதாவது கதிர் என்பது ஒளியெனவும் சுடரில் பிறந்த முருகக்கடவுள் எனவும், காமம் என்பது அன்பெனவும் கொண்டு கதிர்காமம் எனப் பொருள்படும். இத்தகைய இடம் உலகத் தமிழராற் சிறப்பாக இந்துக்களால் வந்தனை செய்யப்படும் இடமாகத் திகழ்கின்றது. இந்தப் புனிதத் தலம் நோக்கி இலங்கையில் பல்வேறு இடங்களிலுமிருந்து பாத யாத்திரை மேற்கொள்ளுவது மரபாக அன்று தொட்டு இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த வகையில் மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் பாதயாத்திரை சங்கம் முதனிலை பெறுகின்றது. இதனை ஆரம்பித்து வைத்தவர் சடையப்பா சுவாமிகள் ஆவார். இன்று அவர் சமாதி திராய்மடு என்னுமிடத்தில் உண்டு. இவை மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பேராலயத்திற்கு வடக்கே சுமார் மூன்று கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. கடலலை ஓசையும், களங்கமற்ற தூய்மையான காற்றும் வீசும், பனை வளம் நிறைந்த இயற்கையான இடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இது முப்பது வருடங்களுக்கு முன்பு அடர்ந்த வன விலங்குகள் நிறைந்த காடு, இங்கே பிரம்பு வளமும் இருந்தது. இதனைக் கொண்டு கூடை பின்னுதல், அலம்பல் வெட்டிக் கொடுத்தல் போன்ற தொழில்களையும் செய்து அதில் வரும் வருவாயைக் கொண்டு தனது அன்றாட வாழ்வை நடத்திக் கொண்டு சிறு ஓலைக்குடிசை அமைத்து முருகப்பெருமானை பூசித்து அங்கே வருபவர்களுக்கு நீர் ஆகாரம், உணவும் கொடுத்து வந்தார். அவர்தான் இன்றைய முருகன் ஆலயத்தின் அருகாமையில் சமாதியடைந்திருக்கும் சற்குருநாதர் சடையப்பா சுவாமிகளாவார்.

இவர் தாடி, நீண்ட சடை, கோவணம், தோளில் ஓர் வஷ்திரத்துண்டுடன் காட்சியளிப்பார். சாதாரண மனிதர் போல் வாழ்ந்து வந்த இவர் பரிபூரணமான முருக பக்தராய் திகழ்ந்தார். பிறப்பிடம் மட்டிக்கழியாய் இருந்தும் அமைதி தேடி திராய்மடுக்காட்டுக்குள் குடிசையமைத்து வாழலானார். தான் யாரிடமும் கையேந்தாமல் சுயமாக உழைத்து மற்றவர்களுக்கும் ஈந்து வந்தார்.

தனக்கென எதுவும் தேடவோ, சேர்க்கவோயின்றி, ஏழ்மையுடன் இறை சிந்தனையோடு வாழ்ந்த இவரை சமூகம் இறையடியராய் கண்டது. நாளுக்கு நாள் அவர் செயற்பாடுகள் இறை சிந்தனையில் மேன்மையடைதல் கண்டு அடியார் கூட்டம் இவர் இருப்பிடம் நோக்கிப் புறப்பட்டார்கள். இவர் தன் காலங்களில் சிலரை தனது சீடர்களாகக் கண்டார். அவர்களின் ஒருவர்தான் இன்று யாத்திரையை முன்னெடுத்துச் செல்லும் சி. விஜயசிங்கம் அப்பாஜி அவர்கள் ஆவார்.

ஒருநாள் அது 1963 ஆடி மாதம் சாய் பொழுது தனது கொட்டிலின் முன்பாக சுவாரகமாக சடையப்பர் மணற்தரையில் அமர்ந்தவராய் இருந்தார். அங்கே கூட்டமாய் அரோகரா சத்தத்துடன் கதிர்காம அடியார்கள் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவ்வமயம் அப்பாஜி அவர்கள் சிறுவனாய் கொட்டிலை அண்டிய தூரம் விறகெடுத்துக் கொண்டிருந்தார். திடீர் என உரத்த குரலில் விஜயப்பா என்றொரு குரல் ஒலித்தது. இங்கே வா நீயும் யாத்திரை மேற்கொள்கிறாய் என்றார்.

அந்த வார்த்தையோடு ஆரம்பித்த சிறு குழுவான யாத்திரை சிறு குழுக்களாக பிரிந்து சென்றாலும் சுமார் ஐநூறுக்கும் அநூற்றுக்கும் இடைப்பட்ட யாத்திரர்களை உள்ளடக்கி திகழ்கின்றது. இவ்வளர்ச்சிக்கான காரணம் கண்டிப்பான தலைமைத்துவமாகும். யாத்திரையில் பலன் பெற்றோர் அதிகம். குழந்தைப்பேறு, திருமண நிகழ்வு, பரீட்சை, வியாபாரம் மற்றும் தொழில் முன்னேற்றம் ஆகியன கிடைத்திருக்கின்றன. இவ்வருட யாத்திரையானது முதலாம் கட்டமாக 02-07-2015 ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் பேராலயத்தில் இருந்து கால்நடையாக செல்லும்.

மறுகட்டமாக 04-07-2015 புறப்படும் பாத நடையாகும். மூன்றாம் கட்டமாக 06-07-2015   ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் தங்கி 07-07-2015 காலை 7.00 மணிக்கு பஸ் மூலம் புறப்பட்டு திருக்கோயில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் செல்லும். அங்கு ஏற்கனவே புறப்பட்ட கூட்டங்கள் அனைவரும் இணைந்து ஒன்றாகி புறப்பட்டு 17-07-2015 கதிர்காமம் சென்றடையும் என்பதை இதன் தலைவர் சி. விஜயசிங்கம் அப்பாஜி அவர்கள் தெரிவித்துக்கொள்கிறார்.

கருத்துரையிடுக

 
Top