“முன்னாள் போராளிகள் ஒருங்கிணைந்து ஆரம்பித்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியை வாழ்த்தி வரவேற்கிறோம். தமிழ்த் தேசியத்துக்கு இப்புதிய கட்சி மேலும் வலுச்சேர்க்கும் என்பதே எமது நம்பிக்கையாகும்.” இவ்வாறு அகில இலங்கை மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் வட, கிழக்கின் பிரபல தொழிற்சங்கவாதியுமான எஸ்.லோகநாதன் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில், ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’ எனும் பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளமை தொடர்பில் அவர் இந்த அறிக்கையை விடுத்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- “முன்னாள் போராளிகள் ஒருங்கிணைந்து புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ள தகவல் அறிந்து பெருமகிழ்வடைகின்றோம். தமிழ் மக்களின் விடிவுக்காகத் தம் உயிரையும் துச்சமென மதித்துப் போராட்டகளத்தில் குதித்திருந்த வரலாறு கொண்ட இந்த முன்னாள் போராளிகள் ஜனநாயக நீரோட்டத்துடன் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் போராளிகள் கட்சி ஒன்றை ஸ்தாபித்து ஜனநாயக வழியே நம் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கதும் பாராட்டுக்குரியதுமாகும். முன்னாள் போராளிகளின் இப்புதிய பரிமாண செயற்பாட்டை நாம் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். இதேவேளை முன்னர் ஆயுதமேந்திப் போராடிய ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ போன்ற அமைப்புக்கள் இன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து அரசியல் கட்சிகளாகத் தம்மைப் பதிவு செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றன.

எனவே நம்மக்களுக்காகப் போராடிய முன்னாள் போராளிகளின் கட்சியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தத் தயக்கமுமின்றி உள்வாங்க முன்வரவேண்டும் என்பதே இன்று தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். முன்னாள் போராளிகள் இக்கட்சி மூலம் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றால் புலிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லையென்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விடுமெனக் கருத்துக் கூறி இப்போராளிகளின் புதிய முயற்சியை முளையிலேயே மழுங்கடிக்க அவர்கள் முனைவது அவர்களது புதிய பிரவேசத்தை விரும்பாதவர்களின் கருத்தாகும்.

தேர்தலில் வெற்றி தோல்வியை ஏற்பதே உண்மையான ஜனநாயகமாகும். அதைவிட்டு வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பது விதண்டாவாதமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் போராளிகளின் இப்புதிய பிரவேசத்தை வரவேற்று, இம்முறை பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பாக அவர்களில் ஒரு சிலரையாவது வேட்பாளராக நிறுத்த முன்வரவேண்டும் – என்றுள்ளது. 


கருத்துரையிடுக

 
Top