தினகரன் தேசிய பத்திரிகையின் பிரதம ஆசிரியராக க.குணராசா நியமனம்!" தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக க.குணராசா நியமிக்கப்பட்டிருக்கிறார். பத்திரிகைத்துறையில் சுமார் 30 ஆண்டுகள் அனுபவமுள்ள இவர் 21 ஆண்டுகளுக்கு மேல் தினகரன் பத்திரிகையில் பணியாற்றி வருவதோடு, இந்தப் பத்திரிகையில் பல்வேறு பொறுப்புக்களையும் வகித்துள்ளார்.
1986 ஆம் ஆண்டு தினபதி, சிந்தாமணி பத்திரிகையில் இணைந்து பத்திரிகைத்துறை ஜாம்பவான்களான எஸ்.டி.சிவநாயகம், இரத்தினசிங்கம் ஆகியோரின் கீழ் பணியாற்றி நன்கு பயிற்சி பெற்றவர்.
ஆரம்பம் முதலே செய்தி சேகரிப்பு பணிகளில் விறுவிறுப்போடு செயற்பட்டுவந்த இவர், நாடாளுமன்ற செய்தி சேகரிப்பாளராக நீண்டகாலம் பணியாற்றியிருக்கிறார். தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் செய்தி ஆசிரியராக 1997 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட க.குணராசா, தொடர்ச்சியாக 19 ஆண்டுகள் செய்தி ஆசிரியராகவே தனது பணிகளை துடிப்போடு வழங்கி வந்தார்.
இதன் பின்னர், சுமார் ஒன்றரை வருடங்கள் தினகரன் நாளிதழின் பதிலாசிரியராகப் பணியாற்றிய இவர், இப்போது தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் பதிலாசிரியராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் தினகரனின் தரம், பக்கவடிவமைப்பு, விற்பனை ஆகியவற்றில் திருப்திகரமான உயர்ச்சி ஏற்பட்டதனால் இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.
பத்திரிகைத்துறையில் மாத்திரமல்ல இலத்திரனியல் ஊடகம் மற்றும் எழுத்து துறைகளிலும் இவர்இ உலகம் முழுவதிலும் நன்கு அறியப்பட்டவர்.
1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதிநேர அறிவிப்பாளராக இணைந்து கொண்ட இவர், தேசிய சேவையில் பல்வேறு சஞ்சிகை நிகழ்ச்சிகளைத் தயாரித்து தொகுத்து வழங்கியிருக்கிறார். இலங்கை வானொலியில் நீண்டகாலம் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த குணராசா வேலைப்பழு காரணமாக அதிலிருந்து சற்று ஒதுங்கியிருக்கிறார்.

இதேநேரம், பி.பி.சியின் 'தமிழோசை'யில் வாராவாரம் இவர் எழுதி வழங்கிய 'இலங்கை மடல்' தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதுமுள்ள நேயர்களை நன்கு கவர்ந்திருந்தது. இதன்மூலம் இவர் நன்கு பிரபல்யமானார்.

இப்போது இவர் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் 'நேத்ரா' அலைவரிசையில் நாளேடுகளில் இன்று என்ற செய்திக் கண்ணோட்ட நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். 2000ஆம் ஆண்டு காலப் பகுதியில் ரூபவாஹினியின் வெளிநாட்டுச் செய்தி விமர்சகராக இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.
கல்முனை-03 ஐப் பிறப்பிடமாகக் கொண்ட க.குணராசா, பாண்டிருப்பை புகுந்த இடமாகக் கொண்டுள்ளார். கணபதிப்பிள்ளை, மகேஸ்வரி தம்பதியினரின் ஏக புதல்வாரன இவர், கல்முனை விவேகானந்தா, ஆர்.கே.எம்.பாடசாலைகளில் ஆரம்பக் கல்வியை கற்றார். பின்னர் தனது உயர் கல்வியை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் கற்றார்.
கொழும்பு பல்கலைக்கழகம் சென்னை எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகங்களில் ஊடகத்துறையில் டிப்ளோமா பட்டங்களைப் பெற்றுள்ள குணராசா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊடகத்துறையில் பயிற்சிகளும் பெற்றிருக்கிறார்.

கருத்துரையிடுக

 
Top