நற்பிட்டிமுனையில் நிலவி வந்த சீரற்ற குழாய்நீர் விநியோகப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு தினமும் 10 மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக குடிநீர் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம்  காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான யூ.எல்.தௌபீக் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நற்பிட்டிமுனையில் நிலவி வந்த சீரற்ற குழாய்நீர் விநியோகப்பிரச்சினை தொடர்பில் நிந்தவூரில் நேற்று சனிக்கிழமை (18) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் மேற்கொண்ட பேச்சுவார்தையின் மூலம் இதற்கான தீர்வு எட்டப்பட்டுள்ளது.
கல்முனை மற்றும் நற்பிட்டிமுனை பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்கப்படும் இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு பிரதான காரணமாகும். இதன்காரணமாக சம்மாந்துறை மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கென பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்களின் உதவியுடனேயே தற்போது குடிநீர் விநியோகிக்கப்பட்டுவருகின்றது.
இயந்திரத்தை துரிதமாக திருத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் 3 மாதங்களுக்குள் எதுவித தங்குதடையுமின்றி நற்பிட்டிமுனை பிரதேசத்துக்கு குடிநீர் வழங்கப்படும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப்ஹக்கீம் உறுதியளித்துள்ளார் என்றார்.

கருத்துரையிடுக

 
Top