ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த புதன்கிழமை அமைச்சரவை கூடியபோது சிறுபான்மை சமூம் சார்ந்த இரு விடயங்கள் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் சில முக்கிய விடயங்களை அங்கு சுட்டிக் காட்டியுள்ளனர். .
அமைச்சர் ரவூப் ஹக்கீம் 20 ஆவது தேர்தல் சீர்திருத்தச் சட்டம் தொடர்பில் யதார்த்த நிலைமைகளை அங்கு எடுத்துக் கூறி, இந்தச் சட்டமூலத்தால் சிறுபான்மை இன மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதனை அவர் சுட்டிக்காட்டியதுடன் தான் ஒரு பொறுப்பு வாய்ந்த கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அதனை திருத்தங்கள் ஏதுமின்றி ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
முழுமையான உடன்பாடு எட்டப்படாத காரணத்தினால் புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தை மூடிமறைத்துச் செய்ய முடியாது எனவும் இன்னமும் சரியான தீர்மானம் மேற்கொள்ளப்படாத நிலையில், உரிய சட்டத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்க முடியாது என ஹக்கீம் தெரிவித்ததன் காரணமாக அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன் கடுமையான வாக்கு வாதத்திலும் ஈடுபட வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது.
சிறுபான்மைச் சமூகங்களுக்கும், சிறிய கட்சிகளுக்கும் நன்மை அளிக்கக்கூடிய வாக்காளர்களுக்கான இரட்டை வாக்குச்சீட்டு, வெட்டுப் புள்ளி போன்ற விடயங்கள் தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது கடும் எதிர்ப்பு தெரிவித்த போதே இந்த வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த விடயமானது அமைச்சர் ஹக்கீம் சிறுபான்மை மக்கள் மீதான நலனில் காட்டும் அக்கறையையும் மறுபுறத்தில், அமைச்சர் சம்பிக்க ரணவக்க சிறுபான்மை மக்களின் நலன்களை புறந்தள்ளி பெரும்பான்மை மக்கள் மீதான அவரது கரிசனையையும் எடுத்துக் காட்டியுள்ளது.
உத்தேச சட்ட நகலை ஆதரித்தும் அதற்கான திருத்தங்களை எதிர்த்தும் சம்பிக்க ரணவக்க காரசாரமாக கருத்துகளைத் தெரிவித்த போதே ரவூப் ஹக்கீம் அவருடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
“இதனை தீர்மானிப்பதற்கு நீங்கள் யார்?” என அமைச்சர் ஹக்கீம் ஆக்ரோஷமடைந்த நிலையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். இதன் போது அமைச்சர் ஹக்கீமுக்கு ஆதரவாக அமைச்சர்களான றிசாட் பதியுதீன், பி திகாம்பரம், ஆகியோர் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் கட்சித் தலைவர்களுடனும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்திலும் முஸ்லிமகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்த போது கூட அதனை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சிக்காமல் பெற்றோல் ஊற்றி எரிய வைத்தவர்தான் இந்த சம்பிக்க ரணவக்க. இவர் தொடர்பில் சில விடயங்களை முன்னாள் ஜனாதிபதி அண்மையில் வெளியிட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிறுபான்மை இன மக்களின் அதரவு கிடைக்காமல் போய் அவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டமைக்கு இந்த சம்பிக்கவின் இனவத நடவடிக்கைகளும் காரணம் என்ற தோரணையில் கருத்துகள் வெளியிடப்பட்டிருந்தன.
அதே சம்பிக்க ரணவக்கவே இன்றைய நல்லாட்சியிலும் சிறுபான்மை மக்களின் விசேடமாக, முஸ்லிம்கள் நலனில் அவர்களது நியாயமான உரிமைகளிலும் மீண்டும் கைவைக்க முயற்சிப்பார் என்றால் அது நல்லாட்சிக்கே ஒரு களங்கமாகப் போய் விடும். அத்துடன் இவ்வாறான இனவாத தீ நாக்கு கொண்டுள்ளவர்களுடன் அரசாங்கம் சகவாசம் வைத்து அவர்களது சொற்படி சிறுபான்மையின மக்கள் விடயத்தில் செயற்படுமானால் இந்த அரசாங்கமும் எதிர்காலத்தில் கையைச் சுட்டுக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.
இது இவ்வாறிருக்க, வில்பத்துவில் முஸ்லிம்கள் குடியேற்றம் தொடர்பில் இன்று தென்னிலங்கை இனவாத சக்திகள் கிளர்ந்தெழுந்து உள்ளன. இல்லாத பொல்லாத கதைகளை அவிழ்த்து முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு தடைபோட முயற்சிக்கின்றன.
மீள்குடியேற முயற்சிக்கும் மக்களும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் வில்பத்து காட்டை அழிக்கும் காடழிப்பாளர்களாகவும் அத்துமீறிய குடியேற முயற்சிப்பவர்களாகவும் இன்று சித்திரிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் நியாயம், தர்மம் அனைத்தும் மடிந்து போயுள்ளன.
அமைச்சர் ரிஷாத் உண்மை நிலைமைகளை எடுத்துக் கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்ள தயாரற்ற நிலைமையிலே சிங்கள இனவாத சக்திகள் உள்ளன. உண்மைக்கு மாறான விடயங்களை ஊதிப் பெருப்பித்து சிங்கள மக்களைச் சூடேற்றி முஸ்லிம்களின் குடியேற்றத்தை தடுக்கும் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், இந்த விடயத்தில் அரசாங்கம் கூட பெரிதாக அக்கறை கொண்டதாக தெரியவில்லை.
உண்மையை ஆராயந்து அறிந்து கொள்ளாமல் செவி வழிச் செய்திகளைக் கெட்டு செயற்படும் நிலைமையிலேயே அரசு இந்த விடயத்தில் உளள்து.
விலபத்து தேசிய வனப் பகுதியில் பெறுமதிமிக்க மரங்களை முஸ்லிம் மீள்குடியேற்றகாரர்கள் தறிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில் அதன் உண்மைத் தன்மையை ஒரு சிங்கள இணையம் அம்பலப்படுதியதன் மூலம் இனவாதிகளின் குற்றச்சாட்டுகளில் ஒன்று பொய்யாக்கப்பட்டுள்ளது.
“வில்பத்து தேசிய வனத்தில் மரங்களை வெட்டுதல், கடத்துதல் தொடர்பிலான உண்மைகள் வெளிச்சத்தில்“ என்ற கருத்துப்பட அந்த இணையம் படங்களின் ஆதாரங்களுடன் தகவலை வெளியிட்டுள்ளது.
வில்பத்து பிரதேசத்தில் வன அதிகாரிகள் மேற்கொண்ட திடீர்ப் பாய்ச்சலின் போது மூன்று லட்சம் ரூபா பெறுமதியான மரங்களை அவர்களால் கைப்பற்ற முடிந்துள்ளது. இந்த மர தறிப்புடன் தொடர்புடையவர்கள் ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கான நடவடிக்கைகளை வன இலாகா அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் வருவதாகவும் அந்த இணையம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் பெரும்பாலும் எந்த இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதனை விளக்கி தீர்ப்பு வழங்குவதற்கு இங்கு எந்தப் பஞ்சாயத்தும் தேவை இல்லை.
அமைச்சர் ரிஷாத்தையும் முஸ்லிம்களையும் முடிச்சுப் போட்டு வில்பத்து காட்டை அழித்து குடியேற்ற முயற்சிகளை முன்னெடுப்பதாக தெரிவிக்கும் தென்னிலங்கை இனவாத சக்திகள் இப்போது இந்த விடயத்தில் என்ன கூறப் போகிறார்கள். எங்கே அந்த பசுமைப் புரட்சியாளர்களும் இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்களும் சுற்றாடல் அவதானிகளும்?

இதேவேளை, வில்பத்து விவகாரம் தொடர்பிலும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவையில் பிரஸ்தாபித்திருந்தார். இந்த விடயம் தனக்கோ தனிப்பட்ட நபர்களுக்கோ உரித்தானது அல்ல என்றும் அகதிகாளக்கப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு தேவையான விடயங்களை முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்தே இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை உப குழுவொன்றினை நியமித்து அதன் ஊடாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக அமைச்சரவை உப குழுவொன்றை நியமித்துள்ளார்.
ஆக, கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் இரண்டு விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் தலைமைகள் தங்களது சமூம் சார்ந்த விடயங்களுக்காக இந்த நாட்டு அரச தலைமையிடம் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.
ஆனால், அதற்கான தீர்வுகள் இன்னும் சந்திப்புகளாகவும், குழுக்களை நியமிப்பதாக மட்டுமே எட்டப்பட்டுள்ளன. இந்த அரசு ஆட்சியேற்ற பின்னர் முஸ்லிம்கள் உரிமைகள் தொடர்பிலும் அவர்களது பிரச்சினைகள் குறித்தும் பெரிதாக பேசக்கூடிய வகையில் எதனையும் செய்யவில்லை என்பதே உண்மை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிகால இறுதிக் கட்டத்தில் (தேர்தல் காலத்தில்) ஒரு பழமொழியை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டிருந்தார். அதவாது கண்ணுக்குத் தெரியாத அழகியை விட கண்ணுக்குத் தெரிந்த பேய் நல்லது என்று. இந்தக் கதை இலங்கை முஸ்லிம்களுக்கு பொருத்தமாகி விடுமோ தெரியாது

கருத்துரையிடுக

 
Top