ஏ. எச்.எம் பூமுதீன்

வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பிலும் வில்பத்தின் உண்மையான அமைவிடம் குறித்தும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு நேற்றிரவு வெள்ளவத்தை ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றது.
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்திற்கு முன்னாள் மற்றும் இந்நாள் முஸ்லிம் அரசியல் வாதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் இந்நாள் எம்பிக்கள் , அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு மேற்படி, அமைப்பினால் தொலைபேசி மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது , இன்ஷா அல்லாஹ் பார்ப்போம் என்றார்.

செயலாளர் நாயகம் ஹஸன் அலிக்கு அழைப்பு விடுத்த போது , மன்னிக்க வேண்டும், என்னால் வரமுடியாது. ஆனால் கட்சி சார்பான ஏனையவர்களை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவிறுத்தல் விடுப்பதாக கூறினார்.

முகா எம்பி பஷீர் சேகுதாவுத் - வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற அமைப்பின் தொலைபேசி அழைப்புக்கு இறுதிவரை பதிலளிக்கவே இல்லை.

ஹரீஸ் மற்றும் பிரதியமைச்சர் தௌபீக் ஆகியோரின்  தொலைபேசிகள் செயலிழந்து காணப்பட்டன.
முன்னாள் எம்பி அஸ்வருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது – 'நான் வருவேன்., ஆனால், எனது தலைவர் மகிந்தவுக்கு எதிராக பேசினால் கூட்டத்தை குளப்புவேன் என்றார். 

இதற்கு பதிலளித்த தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியவர் ,நீங்கள் அவ்வாறு கூட்டத்தை குழப்பினால் அங்கு வரும் முஸ்லிம்களில் யாராவது உங்களை தாக்க முயற்சித்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என பதிலுரைத்தார். 

எனினும் பின்னர் முன்னாள் எம்பி  அஸ்வர் கூட்டத்தில் கலந்து கொண்டு வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் மகிந்தவும் பிழை செய்துவிட்டார் என கூறி அமர்ந்துவிட்டார்.

அப்துல் காதர் எம்பிக்கு அழைப்பு விடுத்த போது முடிந்தால் வரப்பாக்கிறேன் தம்பி என பதிலளித்தார்.

வருவோம் என கூறிய அமைச்சர்களான ஹலீம் ,கபீர் ஹாஸிம் ஆகியோர் இறுதிவரை வருகை தரவில்லை.
இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்ட்டது. அவர்களில்; ஜெமீல் மட்டுமே வருகை தந்திருந்தார்.

அந்த ரீதியில் முகாவின் மற்றுமொரு கிழக்கு மாகாண சபை உறுப்பினரான அட்டாளைச்சேனை நஸீருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போது அவர் மிகவும் அநாகரீகமான முறையில் பதிலுரைத்தமை அமைப்பினருக்கு மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியது.

'வில்பத்து ரிசாதின் பிரச்சினை. இந்தக் கூட்டத்திற்கெல்லாம் எங்களை அழைக்கக்கூடாது. நான் முஸ்லிம் காஙிகிரஸ் காரன். அதனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரின் மக்களின் விவகாரங்கள் தொடர்பான இக்  கருத்தரங்கிற்கு நான் வரமாட்டேன் என பதிலளித்தார்.

இது ரிசாதின் கூட்டமுமல்ல அ.இ.ம.காவின் கூட்டமுமல்ல. இது பொதுவான வடக்கு முஸ்லிம்களின் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள கூட்டம் என ஏற்பாட்டாளர் பதிலுரைத்த போதும் தொலைபேசி அழைப்பை திடீரென துண்டித்துவிட்டார் நஸீர்.
வன்னி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் எம்பியான முத்தலிபாவா பாறுக்குக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவரும் இறுதி நேரம் வரை வருகை தவில்லை.

இந்தநிலையில் கூட்டம் நேற்றிரவு 07.45 மணிக்கு ஆரம்பமானது. வில்பத்துவின் உண்மையான அமைவிடம் , வடக்கு முஸ்லிம்களின் துயரம் தொடர்பான காணொளி காட்சிப் படுத்தப்பட்டதுடன் சிறப்பு பேச்சாளர்களின் உரையும் இடம்பெற்றது.
இதன்பின்னர் கருத்தரங்கில் கலந்து கொண்ட அரசியல் பிரமுகர்கள் தத்தமது கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்தனர்.

முகா எம்பி அஸ்லம் -வில்பத்து விவகாரம் என்பது ஒரு தனி மனிதனான ரிசாதை இலக்கு வைத்தும் அவரது அரசியல் முன்னெடுப்பை தடுக்கும் வகையிலுமே  அமைந்துள்ளது என்பதை நான் உணர்கின்றேன். இந்த விடயத்தில் எனது கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என வலியுறுத்தினார்.

இதன் பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கட்சி முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கும் அம்மக்களின் மீள் குடியேற்றத்திற்காக அமைச்சர் ரிசாத் எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் பூரண உதவி ஒத்தாசைகளை வழங்குவது என பகிரங்கமாக அறிவித்தனர்.

இந்த நிலையில் உரையாற்றிய ஹூனைஸ் பாறுக் எம்பி, வில்பத்து விவகாரத்தை அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனியாக கையாள்கின்றார். முஸ்லிம்கள்; பல ஆண்டுகளாக வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் என்னிடமும் இருக்கின்றன. ஆனாலும் இது தொடர்பில் எவரும் என்னிடம் பேசவில்லை என குற்றம்சாட்டிய போது சபையில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

இந்த கட்டத்தில் , வில்பத்து விவகாரம் தொடர்பான களஆய்வுகளில் ஈடுபடும் சட்டத்தரணி சிராஸ் நூர்தீனை அழைத்த அமைச்சர் ரிசாத் பதியுதீன்? ஹூனைஸ் பாறுக்கிடம் இருக்கும் ஆதாரங்களை பெற்றுக் கொள்ளுங்கள் என அமைதியாக பதிலளித்தார்.
அப்போது குறுக்கிட்ட சட்டத்தரணி சிராஸ், அனைவரையும் அனுசரித்துத்தான் இந்த விவாகரத்தை அமைச்சர் ரிசாத் பதியுதீன் கையாள்கின்றார். இந்த விவாகரம் தொடர்பில் உங்களது கருத்தையும் அறிவதற்காக பல தடைவைகள் உங்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்திய போதும் அதற்கு சிறிதளவேனும் பதிலளிக்க வில்லை நீங்கள். அதனால் உங்கள் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறிய போது ஹூனைஸ் பாறுக் எம்பி எதுவும் பதிலளிக்காமல் மௌனம் காத்ததுடன் உடன் கருத்தரங்கிலிருந்தும வெளியேறிச் சென்று விட்டார்.

இவ்வாறாக கருத்தரங்கு தொடர்ந்து இரவு 11.30 மணியளவில் நிறைவு பெற்றது.

வில்பத்து விவகாரமும் பௌத்த இனவாதப் போக்கும் மேலோங்கியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் கட்சி வேறுபாடுகளெல்லாம் துறந்து அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஓர் இடத்தில் ஒன்று கூடி ஒன்று பட்டு செயற்பட துணிந்த இந்த சம்பவம் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதை இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இவ்வாறான கட்சி பேதங்கள் துறந்து முஸ்லிம் சமுகத்திற்காக மட்டும் ஒன்றுபட்ட இந்த முஸ்லிம் அரசியல் கூட்டு வெறுமனே கூடிக் கலையும் ஒன்றாக இல்லாமல் ஓர் ஆரோக்கியமான குழுவாக இந்நாட்டில் தடம்பதித்து செயற்பட வேண்டும் என்பதே நாடுபூராகவும் உள்ள முஸ்லிம்களின் பெரும் எதிர்பார்ப்பாகவுமுள்ளது.

வில்பத்து விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் எடுத்த முயற்சியும் ஊக்கிவிப்பும் இன்று முஸ்லிம் சமுகத்தின் மத்தியில்  பேசுபொருளாக மாற்றமடைந்துள்ளது..

அமைச்சர் ரிசாதின் 15 வருட அரசியல் வாழ்க்கையில் அவரது சொந்த மக்களின் மீள்குடியேற்ற பிரச்சினைக்காக  ஒவ்வொரு அரசாங்க காலத்திலும் தொடர்ச்சியாக சவால்களையும் துயரங்களையுமே அவர் எதிர்கொண்டு வருகின்றார். இதுமட்டுமன்றி அந்த சவால்களுக்கு மத்தியில் தான் ரிசாத் பதியுதீன் இன்று முழு சமுகத்திற்காகவும் அயராது குரல் கொடுத்து பாடுபட்டும் வருகின்றார்.

இவ்வாறான கட்டத்தில் தான் நாடுபூராகவும் உள்ள முஸ்லிம்கள் - வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காகவும் அதற்காக ரிசாத் பதியுதீன் எடுக்கும் முயற்சி வெற்றி பெறுவதற்கும் பிரார்த்தனையில் ஈடுபடவேண்டும் என்ற நியாயமான கோசம் நாடுபூராவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

வில்பத்து விவகாரத்தில் முன்னின்று செயற்படும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் ஊக்குவிப்பின் காரணமாக நேற்றிரவு இடம்பெற்ற வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி  கூட்டத்திற்கு; வருகை தந்த அனைத்து அரசியல் கட்சிகளின் முஸ்லிம் பிரமுகர்களுக்கு முஸ்லிம் சமுகம் தமது பாராட்டுக்களை நிச்சயம் தெரிவிக்கும் என்பதில் ஐயமில்லை.

கருத்துரையிடுக

 
Top