தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார் !! DR .வை.எல்.எம்.யூசுப்.
கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழ்-முஸ்லிம் உறவு  பாதிப்படைந்து தற்போது சற்று முன்னேற்றம் கண்டுவரும் வேளையில் நீதி நியாயத்தை மதிக்காதவர்களும், இன உறவின் முக்கியத்துவம் விளங்காதவர்களும்,தமிழ்-முஸ்லிம் உறவை சீரழிக்க பகிரதமாகவும் திரைமறைவிலும் முயற்சி செய்து கொண்டு  வருகிறனர் 
தமிழ்-முஸ்லிம் உறவை சீர்குலைக்க எடுக்கும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி நமது உறவுகளை மேம்படுத்த உதவ முன்வருமாறும் அந்தமுயற்சிக்கு தாங்கள் தலைமை தாங்குமாறும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த  வைத்தியசாலை  வைத்தியர் வை.எல்.எம்.யூசுப் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினருக்கு கடிதம் எழுதியுள்ளார் .
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினருக்கு முகவரியிடப்பட்டு  அமைச்சர்களான ரவுப் ஹக்கீம் ,றிசாத் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,மதியமாகான சபை உறுப்பினர் ஆசாத்சாலிஹ் ,ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் ஆகியோருக்கு பிரதியிடப் பட்டு  வைத்தியர்  யூசுப்  எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது 
தமிழ்-முஸ்லிம் உறவை சீர்குலைக்க எடுக்கும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி நமது உறவு களை மேம்படுத்த உதவ முன்வருமாறும் அந்தமுயற்சிக்கு தாங்கள் தலைமை தாங்குமாறும் பணிவான வேண்டுகோள் விடுக்கின்றேன் 

கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழ்-முஸ்லிம் உறவு  பாதிப்படைந்து தற்போது சற்று முன்னேற்றம் கண்டுவரும் வேளையில் நீதி நியாயத்தை மதிக்காதவர்களும், இன உறவின் முக்கியத்துவம் விளங்காதவர்களும், தமிழ்-முஸ்லிம் உறவை சீரழிக்க பகிரதமாகவும் திரைமறைவிலும் முயற்சி செய்து கொண்டிருப்பதை உங்களின் கவனத்திற்கு கொண்டுவரலாமென நினைக்கிறேன்.

2013 ம் ஆண்டு முதல் சுகாதார அமைச்சு தேசிய சுகாதார கொள்கைக்கமைவாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையை, இரத்தவங்கி, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு களுக்காக தெரிவு  செய்து அதற்குத்தேவையான அனைத்து பூர்வாங்க வேலைகளும் நிறைவுற்று இரத்தவங்கிக்கட்டிடம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டும்விட்டது. விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு  இவ்வருடம் ஜூன் மாதமளவில் ஆரம்பிக்க சுகாதார அமைச்சினால் முடிவு  செய்யப்பட்டிருந்தது. இம்முடிவை திரைமறைவில் சில இனவாத சக்திகள் சில தமிழ் சகோதரர்களின் உதவியோடு மாற்றி விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவுக்கான கட்டிடத்தை கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல ஆதாரமற்ற போலியான காரணங்களை காட்டி முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இம்முயற்சியில், தாங்களுக்கும் தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம்.

அம்பாறை மாவட்டம் முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் ஒரேமாவட்டமாகும். இம்மாவட்டத்திலே காரைதீவுப் பிரதேச செயலகத்திலும் நாவிதன்வெளிப் பிரதேச செயலகத்திலும் முஸ்லிம்கள் அண்ணளவாக 30 தொடக்கம் 40 வீதமானவர்கள் வசிக்கிறார்கள். கல்முனைப் பிரதேச செயலக பிரிவுக்குள்  தமிழ் சகோதரர்கள் 29.5 வீதமானவர்கள் வசிக்கிறார்கள். கல்முனையில் உபபிரதேச செயலகமும் தமிழ்தரப்பிற்கு உள்ளது. காரைதீவிலும் நாவிதன்வெளியிலும் 35 வீதத்திற்கு மேலான முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்திற்கு தனியான பிரதேச செயலகமோ, அல்லது உபசெயலகமோ வழங்குவதை விரும்பாத தமிழ் சகோதரர்கள் 29.5 வீதமான தமிழர்களுக்கு கல்முனையில் தனியான பிரதேச செயலகத்தைக் கேட்டுப் போராடிக் கொண்டிருப்பது அவர்களின் நியாயமற்ற கோசத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவதாயுள்ளது. கல்முனை முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை பாராபட்சமாக நடாத்துவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதாக அறிகிறேன். அதன்பிரதிபலிப்பே இந்தத் தனியான பிரதேச சபை மற்றும் செயலகக் கோரிக்கை எனவும் அறிகிறேன். தேசிய மற்றும் மாகாண ரீதியில் உங்களின் கட்சிக்கும் முஸ்லிம்காங்கிரசிற்கும் இடையில் புரிந்துணர்வு  இருக்கும்போது, இந்தப்பிரிவினைவாதம் வளர்வது கவலையளிக்கும் விடையமாகவே பார்க்கிறேன்.

கல்முனை நகரிலே, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வரைக்கும் முஸ்லிம்களின் கடைத்தொகுதிகள் காணப்பட்ட போதிலும் பயங்கரவாத சூழலில் முஸ்லிம்கள் அவ்விடத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டு பின்னர் மிகக்குறைந்த விலைக்கு தமிழ்தரப்பு அக்கடைகளை கொள்வனவு  செய்ய அக்கடைகளின் சொந்தக்காரர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். தமிழர்கள் வாழ்ந்த சில பிரதேசங்களை முஸ்லிம்கள் சில தசாப்தங்களுக்கு முன் கையாடியதாக ஒரு கதை தமிழ்தரப்பால் கூறப்படுகிறது. ஆனால் அக்காலப்பகுதிகளில் முஸ்லிம்கள் எந்த பயங்கரவாதத்திலோ இனக்கலவரசூழலிலோ சம்பந்தப்பட்டதாக வரலாறுகளில்லை. சட்டபூர்வமாக பணம் கொடுத்து நிலங்கள் வாங்கப்பட்ட வரலாறே உள்ளது. இவ்வாறான காரணங்களைகூறி முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்களின் செல்வாக்கை பலவீனப்படுத்தும் வகையில் எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் நம் உறவை பலவீன்படுத்தவே உதவும் என நினைக்கிறேன்.
1993 ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதிகளில் கல்முனை சாஹிறாக்கல்லூரி வீதியிலிருந்து கல்முனை வடக்கு வைத்தியசாலைக்கு வடக்கேயுள்ள தாளவட்டான் சந்தி என்றழைக்கப்படும் அவ்வீதி வரைக்குமான பிரதேசம்” கல்முனை பட்டினசபை” என்றும், அதனை கல்முனை 1 தொடக்கம் 7 வரைக்குமான வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டு கல்முனை 1உம், 2உம் தமிழ்பிரிவாகவும் 3 தொடக்கம் 7வரைக்குமான பிரிவு  முஸ்லிம் பிரிவாகவும் காணப்பட்டது. பின்னர் 1994 காலப்பகுதியில் நிருவாக தேவைக்கிணங்க கல்முனை முஸ்லிம்பிரிவிற்கு கல்முனைக்குடி எனும் கிராமநிலதாரி உபபிரிவு  பெயர் வழங்கப்பட்டது. அண்மையில் வட்டாரப்பிரிவு  சம்பந்தமாக அம்பாறை அரச அதிபர் காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கல்முனை 1 ம் இ 2 ம் பிரிவிற்கு மாத்திரம் கல்முனை எனும் பெயரை சூட்ட தமிழ்தரப்பு போராடியமை, அவர்கள் முஸ்லிம்களைப் பலவீனப்படுத்த எடுக்கும் முயற்சிக்கு மற்றுமொரு சான்றாகும். 

சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்பு, அம்பாறை கச்சேரியில் அரச அதிபர் முன்னிலையில் வட்டாரப்பிரிவு  சம்பந்தமாக தமிழ்-முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலொன்று நடைபெற்ற போது,நீலாவணையிலிருந்து சாஹிறாக்கல்லூரி வீதி வரைக்குமான பகுதிக்கு கல்முனை எனும் பெயரை சூட்டி கல்முனை 1 தொடக்கம் 16 வரை வட்டாரமாக பிரிப்போம் என அரச அதிபர் பிரேரணை ஒன்றை முன்வைத்த போது தமிழ் சகோதரர்கள் அதனை எதிர்த்தார்கள். ஆயினும்,சாய்ந்தமருதையும் உள்வாங்கி 22 வட்டாரமாக பிரிக்கமுடியுமாயின் அதனை ஏற்றுக் கொள்வோம் எனவும் கூறினார்கள். இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். சாய்ந்தமருதும் உள்வாங்கப்படுமாயின் கல்முனையில் தமிழ்மக்களின் விகிதாசாரம் குறைவடையும். அது அவர்களுக்கு தீங்கானதே. எனினும் அதை அவர்கள் விரும்பினார்கள். ஏனெனில் சாய்ந்தமருது தனியான பிரதேச சபைக்கு குரலெழுப்பிக் கொண்டிருக்கின்றது. அவர்கள் கல்முனையுடன் சேருவதை விரும்பவில்லை என்பதைத் தெரிந்து கொண்டு விரண்டாவாதமாக போராடினார்கள். சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்கப்படுகையில் தமிழ் தரப்பிற்கும் தனியான ஒன்றைப் பெற்றுக் கொள்ளமுடியும் என நினைத்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற பல்வேறு நியாயமற்ற கோஷங்களிலும்இ நடவடிக்கைகளிலும் ஒருசில தமிழ் சகோதரர்கள் முஸ்லிம்களுக்கெதிராக பல்வேறு பிரதேசங்களிலும் செயற்படுவதனால் தமிழ்-முஸ்லிம் நிரந்தர ஒற்றுமை, சகோதரத்துவம் வெறும் பகற்கனவாகவே அமைந்துவிடலாம் என்ற அச்சமும் என்னைப் போன்றோருக்கு  ஏற்பட்டுள்ளது. அதேபோல், முஸ்லிம்களும் நியாயமற்ற முறையில் நடந்து கொள்ள முடியும். அவ்வாறான சூழல்களில் இருதரப்பும் சமாந்தரமாக பேசி நியாயமான சுமுகமான முடிவுக்கு வரக்கூடிய ஏற்பாடு செய்யப்படவேண்டிய அவசியமும் உள்ளது.

அதேபோன்று, பயங்கரவாத காலப்பகுதிகளில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீள்குடியமர்த்தப்படுவதற்கும் பறித்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் மற்றும் மேட்டு நிலக்காணிகளை மீள் கையளிக்கப்படுவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தமிழ்தரப்பால் இதுவரைக்கும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் எமது நிரந்தர ஒற்றுமைக்கு பலத்த சவாலாகவே உள்ளது என்பதனையும் இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமானது என நினைக்கிறேன்.

வடகிழக்கு பூமி தமிழ்பேசும் மக்களின் தாயகம் எனும் சொல்லை வெறும் வார்த்தைகளால் உச்சரிக்காது அர்த்தமுள்ளதாக ஆக்க தாங்களின் தலைமையில் முஸ்லிம் சிவில் சமுகத்தை உள்ளடக்கி பிரச்சினைகளுக்குத் தீர்வு  காண முன்வரவேண்டும் என மிகவும் பணிவன்புடன் வேண்டி இந்த மடலுக்கு சாதகமான உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து முடிக்கிறேன். என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.கருத்துரையிடுக

 
Top