ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
“கடந்த அரசாங்கத்தின் போது கிழக்கில் சிறுபான்மை மக்கள் சகல விடயங்களிலும் பின் தள்ளப்பட்டு வந்தமை அனைவரும் அறிந்தது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை வேண்டுமென்றே வெளிமாகாணங்களுக்கும் தூர இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டமை போன்ற பெரும் அநியாயங்கள் நடந்தேறியுள்ளன. இப்படியான சம்பவங்களுக்கு இனியும் இடமளிக்க மாட்டேன்“என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியமை காரணமாகவே சில விடயங்களிவ் நான் வெளிப்படையாகவே அவருடன் விவாதம் புரிய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
தான் கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் அவருக்கு உரித்தான தொனியில் இதனை அவர் கூறியிருந்தாலும் உண்மைகள் வேறுபட்டன என்பதனை ஹாபிஸ் நஸீர் அவர்கள் ஏற்றுக் கொள்ள பின்னிற்கவே கூடாது.
முஸ்லிம்களை பொறுத்த வரையில் நாங்கள் எந்த அரசாங்கத்தையும் காப்பாற்ற வேண்டிய தேவையில்லை. இன்றைய அரசு கூட எங்களது பங்களிப்புடனேயே ஆட்சி புரிகிறது. இது மத்திய அரசுக்கு மட்டுமல்ல. கிழக்கு மாகாண அரசுக்கும் பொருந்தும்.

கடந்த அரசில் சிறுபான்மை மக்களுக்கு தீங்கு இழைக்கப்பட்டதாக கூறுகிறீர்கள். உண்மைதான். ஆனால், இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்கள் அடைந்து கொண்ட நன்மைகள் என்ன? இந்த நல்லாட்சி அரசு என்ன முஸ்லிம்களுக்கு சாமரம் வீசி சந்தனமா தெளித்துள்ளது? கடந்த மஹிந்த அரசு முஸ்லிம்களை முன்னால் குத்தியது. இன்றைய மைத்திரி அரசு எம்மை பின்னால் குத்துகிறது. நடந்த, நடந்து வரும் சம்பவங்கள் இதற்குச் சான்று.
நானும் நீங்களும் உண்மையைப் பேசுவோம். வெறும் வார்த்தைகள் கொண்ட வாக்குறுதி பிரசாரங்களால் எமது இனத்தை ஏமாற்றும் முயற்சியிலிருந்து என்னையும் உங்களையும் இறைவன் பாதுகாக்கட்டும்.
நீங்கள் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் கிழக்கு மாகாண சபையால் எதனை உங்களால் ஆக்கபூர்வமாகச் செய்ய முடிந்தது? உங்களது வலுவிழந்த அதிகாரங்களும் கிழக்கு ஆளுநரின் அதீத பிடியும் இன்று இரண்டு பாதையில் வெவ்வேறாகப் பயணிக்கின்றன. அதில் நீங்கள் பின்டைவைச் சந்தித்துள்ளீர்கள். தூரமாக்கப்பட்ட இந்த இரண்டு மையங்களும் இன்று முரண்பாட்டு பாதையில் செல்வதனை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
உண்மைகளை மூடிமறைத்து பொய்மைகளுக்கு பூமாலை சூட்டி நீங்கள் ஊர்வலமாக அழைத்து வருவதால் ஏமாறப் போவது நானும் நீங்களும் அல்ல. எமது சமுதாயமே. இதனை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் முதலமைச்சரே!!
நீங்கள் கிழக்கு மாகாண முதல்வராக பதவியேற்ற பின்னர் தமிழ் பேசும் மக்களுக்கு எவ்வளவோ செய்ய வேண்டும் என்ற ஆதங்கம், ஆசையில் இருந்திருப்பீர்கள், கிழக்கை ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக கொண்டு வர முயற்சித்திருக்கலாம். அவ்வாறு இருந்தால் உங்களைப் பாராட்டுகிறேன். ஆனால் அவ்வாறான திட்டங்கள் உங்களால் முன்வைக்கப்பட்டிருந்தால் அனைத்தும் இன்று ஆளுநரின் மேசையில் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் என நான் நிச்சயமாக நம்புவேன்.
அன்றைய அரசு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை வேண்டுமென்றே வெளிமாகாணங்களுக்கும் தூர இடங்களுக்கும் அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளீர்கள். சரி இருந்து போகட்டும். உண்மைதான். ஆனால், இந்த அரசாங்கமும் உங்களது மாகாண சபையும் வேலையற்ற அம்பாரை மாவட்ட தமிழ் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதில் ஏன் பின்னடிக்கின்றன என்பதற்கான உங்களது விளக்கம் என்ன? அந்த பட்டதாரிகள் அம்பாறை மாவட்டத்திலிருந்து திருமலைக்கு வந்து பேராட்டம் நடத்தியதுடன் மன உளைச்சலுக்கும் உள்ளாகினரே? இதற்கான தீர்வினை ஏன் உங்களால் வழங்க முடியாது இழுத்தடிக்கிறீர்கள்.?
இதன் பின்னணியில் உங்கள் ஆளுநரின் கரங்கள் செயற்படுகின்றன என்றே நான் கூறுவேன். இதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அவ்வாறு இல்லையெனில் அதற்கான காரணத்தை உங்களால் முன்வைக்க முடியுமா? யாரையும் காப்பாற்றும் தேவை உங்களுக்கு வேண்டாம்.
சரி, இனி கிழக்கு மாகாண காணிகள் தொடர்பான விடயங்களை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபை சட்டத்தின் கீழான (13 ஆவது திருத்தச் சட்டம்) ஷரத்துகளில் ஒன்றில் ஒத்தியங்கல் பட்டியல் (மாகாண -மத்திய அரசுகள் இணக்கம் கொள்ளல்) நீங்கலாக மாகாண சபையின் சுயாதிபத்தியத்துக்கு உட்பட்ட காணிகள் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன? கிழக்கு மாகாணத்தில் மாகாண சபைக்குரிய காணிகள் இன்று தூர்ந்து போயுள்ளன. இந்தக் காணிகளில் பயன்பாடு தொடர்பில் உங்களால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் யாவை?
இந்தக் காணிகளை பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கு வழங்குவதில் காணப்படும் தடைகள் என்ன? இது தொடர்பில் சில முயற்சிகளை நீங்கள் மேற்கொண்ட போதும் அதற்கும் ஆளுநர் அலுவலகம் தடை போடுகிறது என்பதனை நீங்கள் அறிவீர்களா?
கிழக்கு மாகாணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில், நிரந்தமற்ற முறையிலேனும் ஒரு சிற்றூழியரைக் கூட (மாகாண சபை நிர்வாக செயலக நியமனங்கள், அமைச்சர்களின் ஆளணிகள் நீங்கலாக) உங்களால் நியமிக்க முடியாத ஒரு கையறு நிலையில் நீங்கள் தற்போது உள்ளீர்கள் என்பதனை நீங்கள் அறிவீர்களா?
கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் உங்களால் தயாரிக்கப்பட்ட கருத்திட்ட கோவைகள் (EPDPR) அனைத்தம் இன்று ஆளுநர் அலுவலகத்தில் தேங்கிக் கிடப்பதனை நீங்கள் அறிவீர்களா?
கிழக்கில் கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் தொடர்பில் உங்களால் முன்னெடுக்கப்பட்ட நலனோம்பு திட்டங்களுக்கு என்ன நடந்தது? இவ்வாறு பல விடயங்களை என்னால் அடுக்கிக் கொண்டே செல்ல முடியும். நான் சொல்வது அனைத்தும் பிழை என்று நீங்கள் சரியான ஆதாரங்களுடன் நிரூபித்தால் நான் எனது பேனையை இன்றே முடக்கி விடத் தயார் மாண்புமிகு முதல்வரே!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வீ. ஐயா அவர்கள் வடக்கில் தொழில் நியமனங்களை தாராளமாக வழங்குகிறார், தற்காலிக நியமனங்களை நிரந்தரமாக்கி கொடுக்கிறார். காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குகிறார். அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கிறார். மக்கள் நல திட்டங்களை தினமும் ஆரம்பித்து வைக்கிறார். ஆனால் அரசாங்கமும் அரசுடன் சேர்ந்துள்ள முஸ்லிம் காங்கிரஸும் ஆட்சி நடத்தும் கிழக்கு மாகாண சபையால் இவ்வாறு எல்லாம் ஏன் செய்ய முடியாது உள்ளது?
ஊவா மாகாணத்தை பாருங்கள்.. அங்குள்ள மாகாண சபையானது மத்திய அரசின் வழிகாட்டலில் ஆசிரியர் நியமனங்கள் அள்ளி வழங்குகிறது. அங்கு மாகாண சபையின் இணக்கத்துடன் மத்திய அரசே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏழு பேர்ச் காணியுடன் வீடும் கட்டிக் கொடுக்கிறது. ஊவா மாகாண முதல்வரான ஹரீம் பெர்ணான்டோ பல நூற்றுக் கணக்கானவர்களுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்கி வருகிறார். அந்தப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திடங்களை முன்னெடுத்து வருகிறார்.
கடந்த அரசினால் முழுமையாக முடியாது இடைநடுவில் கைவிடப்பட்டிருந்த அரச வெளிக்கள ஊழியர்களுக்கான மோட்டார் சைக்கிள்களையும் இந்த ஊவா மாகாண முதல்வர் இப்போதும் வழங்குகிறார் என்றார் அவரின் அதிகாரம் ஆளுமையின் நிலைதான் என்ன? ஆனால், கிழக்கில் இன்னும் அதிக அரச வெளிக்கள ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்க வேண்டியுள்ள நிலையிலும் அதனை உங்களால் பெற்றுக் கொடுக்க முடியாதுள்ளதே!
வடக்கில் சீ.வி ஐயாவினாலும் ஊவாவில் ஹரீம் பெர்னாண்டோ, திகாம்பரம், இராதா கிருஷ்ணன் போன்றோரினாலும் செய்ய முடிந்தவைகளை உங்களாலும் மத்திய அரசின் உதவியுடன் ஏன் செய்ய முடியாதுள்ளது. கிழக்கு மாகாண சபையானது இன்று வெறும் வாக்குறுதிகளிலேயே காலத்தையே கடத்திச் செல்கிறது. இந்த முதலமைச்சர் பதவியினால் எந்தச் சமூகத்துக்கும் என்ன நன்மை?
இவ்வாறான நிலைமை இன்று காணப்படும் போது கடந்த அரசு காலத்தில் கிழக்கில் சிறுபான்மை மக்கள் சகல விடயங்களிலும் பின் தள்ளப்பட்டு வந்தமை அனைவரும் அறிந்ததே என்று நீங்கள் நா கூசாமல் சொல்கிறீர்களே?
உங்களுக்கு சவால் விடுகிறேன்! மேலே நான் கூறிய அனைத்து விடயங்களையும் உங்களால் செய்ய முடியுமென நீங்கள் உத்தரவாதப்படுத்தி முடிந்தால் 3 மாத கால அவகாசத்தில் செய்து காட்டுங்கள் பார்ப்போம். அதன் மூலம் நீங்கள் எனது வாயை அடக்கி விடுங்கள். பேனாவை முடக்கி விடுங்கள். முடிந்தால் வென்று காட்டுங்கள். என்னை வெட்கித் தலைகுனிய வையுங்கள்.
நீங்களும் நானும் ஆதரித்த கிழக்கு மகாண சபையாலும் சரி இன்றைய மைத்திரி அரசினாலும் சரி எமது சமூகம் எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை மாண்புமிகு முதல்வரே! எமது சமுகத்துக்கான உரிமைகள்தான் கிடைக்கவில்லை என்றால் சலுகைகளும் கூடவா சலவை செய்யப்பட வேண்டும்?
வடக்கின் சீப் மினிஸ்டர் சீ .வி என்றால் சலூட் அடித்து எழுந்து நிற்கும் இன்றைய மத்திய அரசு, கிழக்கின் சீப் மினிஸ்டர் ஹாபிஸ் நஸீர் என்றால் சீப் ஆக நினைப்பது ஏன்? இது யார் குற்றம்?
முன்னர் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் நீங்கள் உரையாற்றிய போது, எங்களுக்கு கிடைக்கும் பதவிகள் ஊடாக தாங்கள் சமூகத்துக்கு ஏதாவது செய்யாவிட்டால் அந்தப் பதவியிலிருப்பதில் அர்த்தமில்லை என்று கூறினீர்கள்தானே? இப்போது அந்த நிலைமை வந்து விட்டதுதானே? ஏனெனில் நீங்கள் மானமுள்ள மனிதர்.
அப்படி நீங்கள் செய்யாவிட்டால் “இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமார?“ என்றுதான் நான் கூறுவேன்.

கருத்துரையிடுக

 
Top