ஏ.எல்.எம்.சலீம் 

சம்மாந்துறை மர்ஹும் அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் காரணமாக வைத்தியசாலையின் சேவைகள் ஸ்தம்பிதமடைந்தன.
 இந்த வைத்தியசாலையின் நிர்வாகமும், சேவைகளும் வைத்திய அத்தியட்சகரான டாக்டர் எம்.பீ.ஏ.அஸீஸ் தலைமையில் சிறப்புற முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக சுகாதார அமைச்சினால் மேலதிகமாக வைத்திய அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமையை ஆட்சேபித்தே மேற்படி அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. 
கடமையிலிருந்து வரும் வைத்திய அத்தியட்சகரின் கடமைக்கு மேலதிகமாகக் கடந்த 24 ஆம் திகதி கிடைக்கப் பெற்ற மேலதிக வைத்திய அத்தியட்சகரின் நியமனக் கடிதம் வைத்தியசாலை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த நியமனத்தை ஆட்சேபித்து வைத்தியசாலையின் விசேட துறை வைத்தியர்கள், வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுபணியாளர்களுட்பட சகல தரப்பினரும் இன்று இந்த அடையாள வேலை நிறுத்தத்தில் குதித்தனர். 

இந்த 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் காரணமாக இன்று வெளி நோயாளர் சிகிச்சைப் பிரிவு, கிளினிக் சிகிச்சைப் பிரிவுகள் இயங்காமையால் நோயாளர்கள் திரும்பிச் செல்ல வேண்டிய நிலையேற்பட்டது. எனினும், அவசர நோயாளர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்த மேலதிக வைத்திய அத்தியட்சகர் நியமனத்தில் அரசியல் பின்னணியிருப்பதுடன், வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் சிறப்பான சேவை மற்றும் சுமுக நிலையைக் குழப்பும் நோக்கு உள்ளதாக வைத்தியசாலை உயர் வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, இன்று அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட சகலரும் ஒன்றிணைந்து வைத்தியசாலை வளாகத்துள் கவனயீர்ப்பு அமைதி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
 அரச மருத்து அதிகாரிகள் சங்க கல்முனைப் பிராந்திய இணைச் செயலாளர் டாக்டர் எம்.ஐ.சிராஜ் இது குறித்து கருத்து வெளியிடுகையில் - இந்த வைத்தியசாலைக்கு மேலதிகமாக வைத்திய அத்கதியட்சகர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. வைத்தியசாலையின் சேவைகளும், நிர்வாகமும் தற்போதுள்ள வைத்திய அத்தியட்சகரின் தலைமையில் சிறப்பாகவே நடைபெற்று வருகின்றது. இந்த நல்ல சூழலைக் குழப்பும் அரசியல் சித்து விளையாட்டுக்கு இங்கு இடமில்லை. 24 மணித்தியாலயங்களுக்குள் நியமனம் இரத்துச் செய்யப்பட வேண்டும். அன்றேல் கல்முனைப் பிராந்தியம் தழுவிய எதிர்ப்பு போராட்டம் ஆரம்பமாகும் - என்றார். 

கருத்துரையிடுக

 
Top