விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் அறிவிப்பு

ஊடகவியலாளர்களுக்கு தீர்வை அற்ற (Duty free)  முறையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. தகவல் ஊடகத்துறை அமைச்சு நிதி அமைச்சு என்பன இணைந்து நேற்று இத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது..
ஊடகத்துறையமைச்சர் கயந்த கருணாதிலக்க நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இணைந்து நிதியமைச்சில் நேற்று நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டை தொடர்ந்தே இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமைச்சர்கள் இருவரும் ஊடகவியலாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக இது குறித்து அறிவித்தனர்.
வெளிநாடுகளிலிருந்து மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வது மற்றும் தீர்வையற்ற அடிப்ப டையில் அறவிடப்படக்கூடிய ஆகக்குறைந்த கட்டணம் ஆகியன தொடர்பான விவரங்களை குறித்து வாகன கம்பனியுடன் ஆராய்வதற்கான நடவடிக்கைகளை நிதி அமைச்சு நேற்று முதல் ஆரம்பித்துள்ளது.
இதற்கிணங்க எதிர்வரும் ஒருமாத காலத்தில் ஊடகவியலாளர்கள் மேற்படி மோட்டார் சைக்கிள்களுக்காக விண்ணப் பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படு மெனவும் அமைச்சர்கள் வாக்குறுதியளித்தனர்.
இதேவேளை, ஊடகவியலாளர்களுக்கு வழங்குவதற்காக தியகமவில் அமைந்துள்ள இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணியில் இயற்கை சூழலுடன் கூடியதான 1500 வீடுகள் வெகு விரைவில் நிர்மாணித்து வழங்கப்படுமென்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க கூறினார்.
இலங்கைப் பிரஜையாகவும் ஐந்து வருட ஊடக அனுபவமும் அரசாங்க தகவல் திணைக்களத்தில் தம்மை பதிவு செய்துகொண்டவராகவும் மோட்டார் சைக்கிளை செலுத்துவதற்கான வாகன அனுமதி பத்திரமுடைய எந்தவொரு ஊடகவியலாளரும் தீர்வையற்ற அடிப்படையில் மோட்டார் சைக்கிளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரி வித்தார்.
ஊடகவியலாளர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமென்பதே எமது அரசாங்கத்தின் முக்கிய இலக்காகும். செய்தியாளர்களுக்கு தமது தொழிலை விரைவாக மேற்கொள்வதற்கு மோட்டார் சைக்கிள்கள் இன்றியமையாதது என்பதனாலேயே இத்திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்த நானும் அமைச்சர் ரவியும் இணைந்து தீர்மானித்தோம், என்றும் அமைச்சர் கயந்த குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் அரைவாசி விலைக்கு கிடைப்பதென்பது சிறந்ததொரு வரப்பிரசாதமாகும். மேலும் செய்தியாளர்கள் நாட்டின் பொருளாதாரம் குறித்து செய்திகளை வெளியிடும்போது மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

கருத்துரையிடுக

 
Top