கிழக்கு மாகாண சபையின் வரலாற்றில் மாகாண சபை அமைச்சுக்களையும் அமைச்சர்களையும் உள்ளடக்கிய ஒரு நாள் இடம்பெயர் சேவை எதிர்வரும் வியாழக்கிழமை (14.05.2015) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஒரே நாளில் ஒரே இடத்தில் தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கிழக்கு மாகாண சகல அமைச்சர்களும், மாகாண சபை உறுப்பினர்களும், மாவட்ட அரசாங்க அதிபர், சகல கூட்டுத்தாபன திணைக்கள தலைவர்களையும் உள்ளடக்கிய இடம்பெயர் சேவை எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமதின் உத்தவின் ஆலோசனைக்கமைய இடம்பெறும் இந்த ஒரு நாள் நடமாடும் சேவையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சகல பிரச்சனைகளுக்கும் முடிந்தளவு அன்றே உடனடித் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கப்பப்படும்.
இந்த இடம்பெயர் சேவையின்போது மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தங்களது காணி, விவசாயம், மீன்பிடி, கால்நடை, வேலைவாய்ப்பு, பாதைகள், வடிகான்கள், கட்டிடங்கள், சமுர்த்தி, பட்டதாரிகள், முதியோர், சிறுவர், மாணவர்கள், ஆசிரியர்கள், மாதர் சங்கங்கள், கிராமிய சங்கங்கள் உள்ளடலங்காக இன்னுமுள்ள நானாவித பிரச்சனைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் ஒரு வரலாற்று நிகழ்வாக இந்த நடமாடும் சேவை இடம்பெற இருக்கிறது.
இந்ந இடம்பெயர் சேவையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன்  நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியதுறை அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், வீதி அபிவிருத்தி காணி அமைச்சர் ஆரியவதி கலபதி, கல்வி விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, விவசாய கால்நடைகள் அமைச்சர் கே. துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை தவிசாளர் சந்திரதாஸ கலபதி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் சரோஜினிதேவி சார்ள்ஸ், மற்றும் பொலிஸ்மா அதிபர்கள், திணைக்கள அதிகாரிகள், அரச அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்மாபெரும் வரலாற்று நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் கலந்து தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கிழக்கு மாகாண முதலமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இது போன்று நடமாடும் சேவைகள் கிழக்கு மாகாண ஏனைய மாவட்டங்களான அம்பாறை, திருகோணமலையிலும் விரைவில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ,.எல். அப்துல் அஸீஸ் தெரிவித்தார்

Post a Comment

 
Top