யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கல்முனை மாநகர சபையில், கண்டனம் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
 கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று புதன்கிழமை மாலை முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றபோது, மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இந்த கண்டனப் பிரேரணை, அனைத்து உறுப்பினர்களினதும் முழுமையான ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
 இப்பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், 'நாட்டில் நல்லாட்சி மலர்ந்துள்ள சூழ்நிலையில் வடக்கில் சமாதானத்தை சீர்குலைப்பதற்கு சில தீயசக்திகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கூட அதன் பின்னணியாக இருக்கலாம் என்கின்ற சந்தேகம் எழுகின்றது' என்றார். அத்துடன், 'தனித்துவமான கலாசாரம் ஒன்றைக் கொண்டுள்ள தமிழ் சமூகத்துக்குள் இவ்வாறான கொடூரம் ஒன்று இடம்பெற்றுள்ளமையானது எமக்கு பெரும் அதிர்ச்சியையையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்' என்றும் அவர் கூறினார். 'இந்த நாட்டு மக்கள் மிகவும் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் ஏற்படுத்திக்கொண்ட நல்லாட்சிக்கு சவால் விடும் வகையில் இச்சம்பவம் அமைந்துள்ளது. தற்போது நாட்டில் நிலவும் அமைதிச் சூழலை குழப்பும் வகையில் மிகவும் திட்டமிட்டு சில நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட அன்று நான் அங்கு தங்கியிருந்தேன். அப்போது இது தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக கொழும்பில் இருந்து சட்டத்தரணி ஒருவர் கொண்டுவரப்பட்டிருக்கிறார் என்ற வதந்தி திட்டமிட்டு பரப்பப்பட்டு வன்முறைகள் தூண்டிவிடப்பட்டிருந்தன. அந்தளவுக்கு மக்கள் பிழையாக வழிநடத்தப்படுகின்றனர். இது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
 வடக்கில் சமாதானத்தை சீர்குலைத்து, பீதியை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்வரும் தேர்தலில் மக்களை வாக்களிக்காமல் தடுத்து விட்டு தமது இலக்கை அடைந்து கொள்வதற்கு சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய சதித்திட்டங்களுக்கு துணைபோகும் வகையில் தமிழ் சமூகத்திற்குள்ளேயே சமூக விரோத சக்திகள் செயற்பட்டு வருகின்றன என்பதை மக்கள் புரிந்து கொண்டு மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்' என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். 

கருத்துரையிடுக

 
Top