மட்டுநகர் வாழ்வோசை பாடசாலையின்  இப்பாடசாலைஆரம்பிக்கப்பட்டு 15 வருடபூர்த்தியை முன்னிட்டு  இக்கட்டுரை  வரையப் பட்டுள்ளது ....
மீனவள் இன்னிசை பாடும் மட்டு மாநகரினிலே வாய்மொழியையும் கேட்கும் வல்லமையையும் இழந்த மாணவ மணிகளுக்காக வை.எம்.சீ.ஏ.யின் அணுசரனையுடன் நடாத்தப் படுவதே இவ்வாழ்வோசைப் பாடசாலையாகும்.
இப்பாடசாலையானது 1999ம் ஆண்டு 3 ஆசிரியர்களுடனும் 11 மாணவர்களுடனும் தனதுபணியைஆரம்பித்தது.
இப்பாடசாலையின் ஆரம்பநடவடிக்கைகள் அனைத்தும் ஒருவாடகைக் கட்டடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. தற்போது தனக்கென ஒரு பெரிய கட்டடத்திலேயே தனதுபணியை மேற்கொள்கின்றது. இப்பாடசாலையானது இவ்வருடம் 15 வருட பூர்த்தியை கொண்டாடுகின்றது. இப்பாடசாலையின் பணிகளோபலவகையில் பல மாணவர்களுக்கு நன்மையை ஏற்படுத்தி அவர்களை வெற்றிப்படிகளிலும் ஏற்றிச் செல்கின்றது.
இப்பாடசாலையில் ஆரம்பம்தொடக்கம் இன்றுவரை 205 மாணவர்கள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் .தற்போது 64 மாணவர்கள் கல்விகற்கின்றனர்  ஏனைய மாணவர்கள் வீடுகளில் இருந்து சுய தொழிலினையும் பல தனியார் நிறுவனங்களிலும் மாநகர சபையிலும் அரசாங்கத் திணைக்களங்களிலும் தொழில் புரிகின்றனர் . இங்கு பத்து ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர்  அத்துடன் கற்றலில் இடர்பாடுடைய மாணவர்களுக்கென வகுப்புக்கள் மேலதிகமாக நடைபெறுகின்றன.
புதிய ஆண்டில் தரம் 7 க்குரிய வகுப்புக்களும் ஆரம்பிக்க உள்ளது இங்கு கல்வி கற்பிக்கும் அனைவரும் பல வகையிலும் பல இடங்களிலும் குறிப்பாக இந்தியா வரை சென்று சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். 
மாணவர்களுடைய வாழ்வில் எவை எல்லாம் முக்கிய விடயமாக கருதப்படுகின்றதோ அவற்றுக்கெல்லாம் இங்கு பயிற்சி வகுப்புக்கள் ,கை வேலைகள் ,தையல் வகுப்புக்கள்,வாழ்த்து அட்டைதயாரித்தல்,ஆடை அலங்காரம் செய்தல் ,நடனவகுப்புக்கள் ,கணனிவகுப்புக்கள் போன்றவற்றிற்கான பயிற்சிகள் மாணவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன.
எமது பாடசாலை மாணவர்களுக்கு சாதாரண பாடசாலையில் கற்பிக்கப்படும் பாடவிதானத்திற்கேற்ப பாடவிடயங்கள் கற்பிக்கப்படுகின்றன இப்பாடவிடயங்கள் அனைத்தும் சைகை மொழியிலேயே நடாத்தப்படுகின்றதுடன் இங்கு கல்விகற்கும் மாணவர்களில் 2 பேர்  புலமைப் பரீட்சையிலும் தோற்றியுள்ளனர் .

இம் மாணவர் களுடைய கற்றல் நடவடிக்கைகளில் மேலதிகமான பாடங்களாக ஒலிகேட்டல் ,ஒலிநயம் ,சைகைமொழி என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்களின் பேச்சுத்திறனை வழப்படுத்துவதற்காக பேச்சுப்பயிற்சியும் கொடுக்கப் படுகின்றதுடன் இதன் மூலம் மாணவர்கள் ஓரளவு அன்றாடதேவைக்கான சொற்களை ஓரளவு தெளிவின்றி உச்சரித்துக்  கூற முடியும். அத்துடன் ஓரளவு சத்தத்தையும் ஏற்படுத்த முடியும். இந்தவகையில் பயிற்றுவிக்கப்பட்ட 04 மாணவர்கள் சாதாரண பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளனர்  
மாணவர்களின் காதுகேட்கும் திறணின் அளவிற்கு ஏற்ப இவர்களுக்கு கேட்டல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை சுற்றாடலில் உள்ளசத்தத்தை மாணவர்கள் சற்றுபுரிந்து கொள்ள உதவிபுரிகின்றது. இப்பாடசாலையில் பல தரப்பட்ட சமய மாணவர்களும் கல்விகற்கின்றனர் . தூர இடங்களில் இருந்து கல்வி கற்கவரும் மாணவர்களுக்காக எமது பாடசாலையில் விடுதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கென விடுதிப் பொறுப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளார் . பாடசாலைக்கு சற்று அண்மித்த தூரத்தில் உள்ளமாணவர்கள் வந்து கல்வி கற்று செல்வதற்கான வாகனவசதிகள் ஏற்படுத்திகொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தவணைப் பரீட்சைக்குரிய வினாப்பத்திரங்கள் அனைத்தும் மாவட்டத்திலுள்ள சாதாரண பாடசாலையில் உள்ளமாணவர்களால் செய்யப்படும் மாவட்ட மட்ட ,மாகாண மட்ட வினாப்பத்திரங்களே ஆகும்.பாடசாலையினால் கற்றலுடன்தொடர்புடைய பல கண்காட்சிகள் பிரதேச பாடசாலையிலும் ஏனைய பிரதேசப் பாடசாலையிலும் நடைபெற்றுள்ளது.மேலும் விளையாட்டுப் போட்டிகளும் ,ஓவியப் போட்டிகள் செவிப்புலன் அற்றமாணவர்களுடனும் ,ஏனைய சாதாரண மாணவர்களுடனும்  நடைபெற்றுள்ளது இதில் இம்மாணவர்கள் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் 
மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண மாணவர்களுக்கு எத்தனையோ பல பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறு பேச்சுத்திறன் அற்ற வாய் பேசமுடியாத மாணவர்களுக்காக அவர்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட பாடசாலை இப்பாடசாலை ஒன்றேஆகும்.
அந்தவகையில் இப்பாடசாலைஆரம்பிக்கப்பட்டு 15 வருடபூர்த்தியை முன்னிட்டு நாளைமறு தினம் 2014.12.06 திகதிகாலை 09.30 மணிக்கு வை.எம்.சீ.ஏஅமைப்பின் கேட்போர்  கூடத்தில் ஒளி விழாவுடன் கூடிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top