ஏ.எச்.எம்.பூமுதீன்


ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அ.இ.ம.கா கட்சிக்குமிடையிலான விஷேட சந்திப்பு இன்று நன்பகல் அலரி மாளிகையில் இடம்பெறற்து.

இச்சந்திப்பின் போது முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்பு ,வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் ,முஸ்லிம் சமுகத்தில் காணப்படும் காணிப்பிரச்சினை ,முஸ்லிம்களின் கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு போன்றவை குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதியுடன் விரிவாக எடுத்துரைத்து கலந்துரையாடியுள்ளது.அ.இ.ம.கா வின் மேற்படி கோரிக்கைகள் தொடர்பில் கவனமாக செவிமடுத்தனர் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர்.இதன் பிற்பாடு குறித்த கோரிக்கைகள் தொடர்பில் மேலும் கலந்துரையாடும் பொருட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் தலைமையில் குழுவொன்றையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகத்தின் தலைமையில் குழுவொன்றையும் நியமிப்தென்றும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த இரு தரப்புக் குழுவும் அடுத்து வரும் ஓர் இரு தினங்களுக்குள் மீண்டும் ஒன்று கூடி மேற்படி கோரிக்கைகள் தொடர்பில் மேலும் ஆராய்வதென்றும் இச்சந்திப்பின் போது முடிவு செய்யப்பட்டது.அதே நேரம் குறித்த இரு குழுவினரினது கலந்துரையாடலை தொடர்ந்து அங்கு எட்டப்பட்ட முடிவு குறித்து அ.இ.ம.கா உயர்பீடம் மீண்டும் கூடி அது தொடர்பில் ஆராயவுள்ளது இதற்கமைய எதிர்வரும் 08ஆம் திகதிக்கு பிற்பாடு ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற இறுதி முடிவை அ.இ.ம.கா பகிரங்கமாக அறிவிக்கவுள்ளதாக கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான மேற்படி சந்திப்பு சுமுகமான முறையில் இடம்பெற்றதாகவும் அவர்; தெரிவித்தார்.இச்சந்திப்பில் ஜனாதிபதி தலைமையில் சு.க பொதுச்செயலாளரும் அமைச்சருமான அனுரபிரியதர்சன யாப்பா , அமைச்சரும் ஐ.ம.சு.மு. பொதுச் செயலாளருமான சுசில் பிரேமஜெயந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.அ.இ.ம.கா தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தலைமையில் , பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் , செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் , கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் நகர , பிரதேச சபைத் தலைவர்கள் உட்பட உயர்பீட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top