வீதி சட்ட விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கான அபராதப் பத்திரங்களை சாரதியின் கையடக்க தொலைபேசிக்கு குறுந்தகவலினூடாக (SMS) அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்வருட இறுதிக்குள் இச்செயல்முறை நடைமுறைக்கு கொண்டுவரப்படும்இதனையடுத்து சாரதிகள் தமக்கான அபராதப் பணத்தினை தபால் நிலையங்களிலோ அல்லது தமது கையடக்க தொலைபேசி கட்டணத்துடனோ செலுத்த முடியுமெனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

குறுந்தகவல்களை அனுப்புவதற்காக கையடக்க தொலைபேசி நிறுவனங்களிடமிருந்து கேள்விப் பத்திரம் கோரப்படவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.அதனைத் தொடர்ந்து வெகுவிரைவில் கிரடிட் கார்ட் மூலம் ஸ்தலத்திலேயே அபராதம் செலுத்தும் முறைமையினை அறிமுகப்படுத்துவது குறித்து பொலிஸ் திணைக்களம் ஆராய்ந்து வருகின்றதெனவும் அவர் குறிப்பிட்டார்.

வீதி ஒழுங்கு முறைகளை மீறிய சிறு குற்றச் செயல்களுக்கான அபராதத்தினை செலுத்துவதற்காக அநேகமான சாரதிகள் தமக்கு உள்ள ஒரு நாள் விடுமுறையிலும், தூர இடங்களிலிருந்து கொழும்பு வருகின்றனர். இதன் மூலம் சாரதிகள் எதிர்நோக்கக்கூடிய அசெளகரியங்களை தவிர்க்கும் நோக்கிலேயே குறுந்தகவல் மூலம் அபராதம் செலுத்தும் செயன்முறையினை நடைமுறைப்படுத்த தீர்மானித்திருப்பதாகவும் அவர்  மேலும் தெரிவித்தார்.

Post a Comment

 
Top