மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் எழுதிய "என் எழுத்தாயுதம்" (ஒரு பத்திரிகையாளனின் பட்டறிவுப் பகிர்வு) நூல் கடந்த  ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு, பம்பலப்பிட்டி, சரஸ்வதி மண்டபத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது. 

'திசை காட்டி' குழுமத்தின் அனுசரணையுடன், சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் 'திசை காட்டி ஸ்தாபகர் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வரவேற்புரையை திசைகாட்டிக் குழும சிரேஷ்ட உறுப்பினர் சி. சுபசீலன் நிகழ்த்தினார். 

நூல் வெளியீட்டுக்கான வாழ்த்துரையை வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வழங்கினர். 

தொடர்ந்து நூல் வெளியீட்டுரையை கம்பவாரிதி இ.ஜெயராஜ் நிகழ்த்தினார். நூலை 'உதயன்', 'சுடர் ஒளி' பத்திரிகைகளின் நிர்வாக இயக்குநரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் வெளியிட்டுவைத்தார்.

 சிறப்பு பிரதிகளை கொழும்பு நகர பிதா ஏ.ஜே.எம்.முஸம்மில், வீரகேசரிப் பத்திரிகை நிர்வாக இயக்குநர் குமார் நடேசன், தினக்குரல் பத்திரிகை நிர்வாக இயக்குநர் எஸ்.பி.எஸ். கேசவராஜா, நாவலர் நற்பணி மன்ற ஸ்தாபகத் தலைவர் கருணை ஆனந்தன், ரி.ஏ.கென்ஸ்ரக்ஸ்சன்ஸ் இயக்குநர் செல்வ திருச்செல்வன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

தொடர்ந்து, நூலுக்கான நயப்புரையை சிரேஷ்ட சட்டத்தரணி இ.ராஜகுலேந்திரா வழங்கினார். இந்த நிகழ்வில் ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் கருஜெயசூரியா, அமைச்சர் பஷீர் சேகுதாவுத், நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சிவசக்தி ஆனந்தன், பொன் செல்வராஜா, க.யோகராஜன், விஜயகலா மகேஸ்வரன், மு.கா.பொதுச் செயலாளர் ஹஸனலி எம்.பி. மற்றும் பிரதி அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட  வடக்கு கிழக்கு மாகாண  சிரேஸ்ட ஊடகவியலாளர் பலரும் கலந்து கொண்டு சிறப்பு பிரதிகளை பெற்றுக் கொண்டனர். Post a Comment

 
Top