பி. முஹாஜிரீன்
“கல்முனைக் கரையோர மாவட்டக் கோரிக்கை என்பது விடுதலைப் புலிகளின் தமிழீழக் கோரிக்கைக்கு ஒப்பான ஒன்றல்ல அது மொழி ரீதியான பொது மக்களின் நிருவாக செயற்பாடுகளுக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது” என அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான எஸ்.எல்.எம். ஹனீபா (மதனி) தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமுமான எம்.ரி. ஹஸன் அலியின் நிதியொதுக்கீட்டில் அக்கரைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிக் கொடுப்பனவுகள் வழங்கல் மற்றும் அக்கரைப்பற்று சமூகசேவை நலன்புரி அமைப்பிற்கு போட்டோ பிரதி இயந்திரம் வழங்கல் ஆகிய நிகழ்வும் விசேட ஊடகவியலாளர் மாநாடும் (21) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றபோது தலைமை உரையாற்யாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எல்.எம். ஹனீபா (மதனி) தொடர்ந்து உரையாற்றுகையில்
“கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை ஆகிய தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியதாக கல்முனை கரையோர மாவட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை என்பது 1978ஆம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து வலுப்பெற்று வருகின்றது. 1955ல் இலங்கையில் 20 மாவட்டங்களே உருவாக்கப்பட்டன. பின்னர் மொனறாகலை, அம்பாறை, கிளிநொச்சி, முல்லைத்தீவூ, கம்பஹா ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு 25 மாவட்டங்களாயின. 1978ல் விசேட நீதிபதிகள் அடங்கிய குழுவான மொறகொட ஆணைக்குழுவினால் கல்முனை கரையோர மாவட்டம், கிளிநொச்சி, கம்பஹா ஆகிய தனியான மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டதற்கிணங்க கிளிநொச்சி, கம்பஹா ஆகிய தனியான மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று வரை கல்முனை கரையோர மாவட்டம் உருவாக்கப்படவில்லை.
1961ல் தமிழ்பேசும் மக்கள் அதிகமாக வாழ்ந்தபோதும் தமிழ், சிங்கள மக்களுக்கென அம்பாறை கச்சேரி உருவாக்கப்பட்டது. ஆனால் அன்று முதல் இன்று வரை தமிழ் முஸ்லிம் மக்கள் தங்களது தாய்மொழியில் அரச அலுவல்களை நிறைவேற்றுவதில் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.  
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மொறகொட ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக கல்முனை கரையோர மாவட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்துள்ளன. 1998, 2002, 2008, 2012 ஆகிய காலப்பகுதிகளில் சந்திரிக்கா பண்டாரநாயக்க, ரணில் விக்ரமசிங்க ஆகியோரது அரசிடமும் தற்போதய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசிடமும் இக்கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தபோதும் அது நிறைவேற்றப் படவில்லை. குறிப்பாக 2002ல் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அனுமதி கிடைத்தும் அதற்கான அலுவலகத்தை எங்கு அமைப்பது என்பதில் அப்போதய எமது பிரதேச அரசியல் வாதிகளுக்கிடையிலான இழுபறி காரணமாக அது கைவிடப்பட்டது.
மேலும்இ 2012ல் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுற்று கிழக்கு மாகாண ஆட்சி அமைக்கும்போதுகூட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கல்முனை கரையோர மாவட்டம் அமைப்பது தொடர்பில் அரசுடன் பேசப்பட்டு அதற்கு அரசாங்கம் உடன்பட்ட நிலையில் இதுகாலவரை இழுத்தடிப்புச் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் பேசப்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ இதனை எதிர்த்துப் பேசினார். இது தழிழீழக் கோரிக்கைக்கு ஒப்பான ஒன்றென விமர்சித்தார். இதனை பிரதமர் ஜயரட்ணவும் ஏற்றுக் கொள்வது போல் இனரீதியான பிரிப்புக்கள் இந்நாட்டில் மேற்கொள்ளப்படக் கூடாது எனப் பேசினார். இதில் 2002ல் கல்முனை கரையோர மாவட்ட உருவாக்கத்திற்கு அமைச்சரவையில் பிரேரணை சமர்பித்த அப்போதய பொது நிர்வாக அமைச்சர் ஜோன் அமரதுங்கவும் இதனை எதிர்த்துப் பேசியமை வேடிக்கையானது.
ஏனெனில் பலர் இதனை அரசியல் உள் நோக்கங்களுடனும் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்களில் தனிப்பட்ட அரசியல் பாதிப்புக்களையுமே சிந்திக்கின்றார்களே தவிர அம்பாறை மாவட்ட தமிழ்பேசும் மக்கள் படுகின்ற இன்னல்களை கருத்திற் கொள்ளவில்லை.
ஆனால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சொல்வதெல்லாம் இது இன ரீதியான பிரிப்போ, இனரீதியான ஒரு கோரிக்கையோ அல்ல. இது மொழிப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு நிர்வாக ரீதியான வழி  என்பதுதான். தற்போதுள்ள 25 மாவட்டங்களுடன் இணைத்து மொறகொட ஆணைக்குழுவின் சிபார்சுக்கமைய 26வது நிர்வாக மாவட்டமாக அம்பாறை மாவட்ட தமிழ்மொழி பேசும் மக்களுக்காக ஒரு மாவட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும்.
இவ்வாறான நிலையில், 30 வருட யுத்த காலத்திலும், யுத்தத்திற்கு பிறகும் இங்கு எல்லாமே இன ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலை, கல்வி அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளுராட்சி மன்றங்கள்,கூட்டுறவு சங்கங்கள் , அரச அலுவலகங்கள் என ஏராளமானவை இன ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏன் கல்முனை கரையோர மாவட்ட உருவாக்கத்தை ஒரு இன ரீதியான பிரிப்பாக, சமூகப் பிரிவினையாகப் பார்க்கப்படுகிறது என்பது புரியவில்லை?
தமிழ் மாவட்டமான வவுனியாவில் சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்திற்கு ஒரு பிரதேச செயலகம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இது பிழை அல்ல. இதனை இன ரீதியான பிரிப்பாக நாம் பார்க்கவில்லை மொழி ரீதியான ஒரு தீர்வாகப் பார்க்கிறோம். சனப்பரம்பல் குறைந்த ஒரு தொகுதி மட்டும் கொண்ட தனி நிருவாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏன் பரப்புக் கூடிய, மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய கல்முனை கரையோர மாவட்டத்தை உருவாக்க முடியாது?
கல்முனை கரையோர மாவட்டம் என்பது எங்கு அமைய வேண்டும் என்பதெல்லாம் பிரச்சினையல்ல. அதை அம்பாறையில் அமைத்தாலும் பறவாயில்லை தமிழ்மொழி பேசும் மக்களுக்கான தீர்வாக இக்கரையோர மாவட்டம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம் என்றார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று மத்திய குழுப் பிரதித் தலைவர் ஏ.எல். மர்ஜான் உட்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், தலா 5 ஆயிரம் ரூபா வீதம் 100 வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.


கருத்துரையிடுக

 
Top