புதிதாக நியமிக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி இன்னும் கடமையை பொறுப்பேற்காததால் வைத்திய அதிகாரி காரியாலய ஊழியர்களும் பொது மக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடந்த பல வருடங்களாக சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வந்த டாக்டர் சஹிலா இஸ்ஸதீன் கடந்த மாதம் முதல் வாரத்தில் தனது மேற்படிப்புக்காக கொழும்பு நகருக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றி வருகின்ற டாக்டர் ஏ.எல்.பாறூக் சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும் இவர் குறித்த வைத்தியசாலையில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாததால தனது புதிய கடமையை பொறுப்பேற்க முடியாமல் இருந்து வருகின்றார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரியான டாக்டர் ஆர்.கணேஸ்வரன், சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு பதில் கடமைக்கு நியமிக்கப்பட்டுள்ள போதிலும் அவர் தனது வேலைப்பளு காரணமாக அங்கு தினசரி சமூகமளித்து- உரிய பணிகளை ஆற்ற முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கர்ப்பிணித் தாய்மார்களும் பல்வேறு கஷ்டங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலை காரணமாக மக்கள் தமது வேலைகளை பூர்த்தி செய்து கொள்வதில் திண்டாடி வருகின்றனர்.
அத்துடன் பொதுமக்களும் இதனால் பெரும் அசுகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் எனவும் புகார் தெரிவிக்கப்படுகிறது. பொது மக்களினால் செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் தாமதமடைந்து வருவதாகவும் அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஆகையினால் இது குறித்து கிழக்கு மாகாண சபை சுகாதாரத் திணைக்களம்,
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் என்பன உரிய நடவடிக்கை எடுத்து உதவுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம், மேற்படி திணைக்களங்களின் பணிப்பாளர்களுக்கு மகஜர்களை அனுப்பி வைத்திருப்பதாக மன்றத்தின் செயலாளர் எஸ்.எம்.கலீல் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

 
Top