கல்முனை மாநகர பிரதேசத்தில் மாநகர சபையினல் சேகரிக்கப்படும் கழிவுகள் நற்பிட்டிமுனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுவதால் அப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு சுகாதாரப் பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் முறையிடுகின்றனர்.

கல்முனை மாநகர சபையினால் கல்முனை பிரதேசத்தில் சேகரிக்கப்பட்ட  கழிவுகள் இதுவரை காலமும் காரைதீவுக்கு அனுப்பப் பட்டு அங்கிருந்து ஒலுவில் அஸ்ரப் நகரிலுள்ள திண்மக்கழிவு சேகரிக்கும் நிலையத்துக்கு அனுப்பப் பட்டு வந்தது. காரைதீவுக்கு அனுப்பப் படும் கழிவுகளுக்கு கல்முனை மாநகர சபையினால் பணம் செலுத்தப்பட்டு வந்ததாகவும் மாநகர சபையில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் கல்முனை மாநகர சபை காரைதீவு பிரதேச சபைக்கு கடனாளியாக இருப்பதன் காரணத்தினால் கல்முனை திண்மக் கழிவை ஏற்பதற்கு காரைதீவு பிரதேச சபை மறுத்துள்ளதால் கல்முனை மாநகர கழிவுகள் கொட்டுவதற்கு இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

நற்பிட்டிமுனையில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை நற்பிட்டிமுனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் கொட்டுவதற்கு கல்முனை மாநகர சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கல்முனை மாநகர முதல்வர் ஆலோசனைப் பிரகாரம் முன்னெடுப்பதாகவும் ஆரம்பத்தில் இதுவொரு பரீட்சாத்த நடவடிக்கையும் என்றே கல்முனை மாநகர பிரதம சுகாதாரப் பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டது.
எனினும் காலப் போக்கில் நற்பிட்டிமுனையில் குபேட்டா வாகனத்தில் சேகரிக்கப் படுகின்ற திண்மக் கழிவுக்கு மேலாக கல்முனை நகரம் முழுவதும் சேகரிக்கப் படுகின்ற கழிவுகள் திருட்டுத் தனமாக இரவோடிரவாக நற்பிட்டிமுனை மைதானத்தில் கொட்டப் பட்டு தீ வைக்கப்பட்டு வருகின்றன இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் துர்வாடையினால் அசௌகரியத்துக்குள்ளாகின்றனர் என அங்குள்ள மக்கள் நற்பிட்டிமுனையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாநகர சபை உறுப்பினர்களை குற்றஞ்சாட்டுகின்றனர்.  குறித்த மைதானத்தின் அருகில் பள்ளிவாசல் ஒன்றும் பாடசாலை ஒன்றும் உள்ளது. குப்பை அகற்றுவதற்கு உதவி செய்வார்கள் என்று மக்கள் வாக்களித்தவர்கள் கல்முனையில் உள்ள குப்பைகளை நற்பிட்டிமுனைக்கு கொண்டு வந்து மக்களை நோயாளிகளாக்க நடவடிக்கை எடுத்து அதற்கு துணை போயுள்ளனர்.

நற்பிட்டிமுனையில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளை மைதானத்தில் கொட்டி உடனுக்குடன் மண் இட்டு மூடப்படும் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டும் அது சீராக இடம் பெறவில்லை. காரைதீவு  பிரதேச சபைக்கு பணம் செலுத்த வசதி இல்லாததால் குப்பை கொட்டும் இடமாக நற்பிட்டிமுனையை தெரிவு செய்வதற்கு உடந்தையாக இருந்த நற்பிட்டிமுனையில் பிறந்து வளர்ந்து அந்தக்காற்றை சுவாசிக்கும் மாநகர சபை உறுப்பினர்கள் ஏன் இந்த விடயத்தைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

கருத்துரையிடுக

 
Top