இவ்வருட இறுதியில் க.பொ.த. சாராரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தமது தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக இன்னும் இரண்டு வாரங்களுக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத்குமார கோரிக்கை விடுத்தார்.
 
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;
 
க.பொ.த. சாராரண தரப் பரீட்சைக்கு வருடாந்தம் சுமார் 5 லட்சம் மாணவர்கள் தோற்றுகின்றனர். எனினும் இம்முறை தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். 
 
2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்கு 16 வயது பூர்த்தியான மாணவர்கள் பாடசாலையூடாக தேசிய அடையாள அடடை பெறுதற்கு விண்ணப்பிக்கலாம்.
 
விண்ணப்பப் பத்திரங்களை கடந்த மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு அனுப்பிவைக்குமாறு சகல பாடசலை அதிபர்களுக்கும் நாம் அறிவித்தபோதும் இது வரை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் நான்கில் ஒரு பங்கினர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
 
அவற்றில் 3387 விண்ணப்பங்களில் கையொப்பமிடாமை மற்றும் முத்திரை ஒட்டப்படாமை போன்ற குறைபாடுகள் காணப்படுவதால் அவற்றை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை உரிய பாடசாலைகளுக்கு திருப்பி அனுப்பியுள்ளோம். எனவே இறுதி நேர நெருக்கடிகளைத் தவிர்க்கும் முகமாக இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மாணவர்களின் விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு சகல பாடசாலை அதிபர்களிடமும் கல்வி அதிகாரிகளிடமும் வேண்டுகோள் விடுக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

 
Top