கிழக்கு மாகாண சபையில் அளுத்கம சம்பவத்திற்கு எதிராக கண்டன பிரேரணையை சமர்ப்பிப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும், தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுக்குமிடையே கருத்தொற்றுமை இன்மையால் பிரேரணையை சமர்ப்பிப்பதில்; இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்வில் மேலும் தெரியவருவதானது,

கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று காலை கூடவிருந்த வேளையில் நேற்று அளுத்கமவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக கண்டன பிரேரணை ஒன்றினை கொண்டு வருவதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தவிசாளரிடம் நேற்று மாலை சமர்ப்பித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலும் இவ்வாறான பிரேரணையை சபையில் சமர்ப்பிக்க இன்று காலை தவிசாளரிடம் அனுமதி கோரியுள்ளார். இதற்கு தவிசாளர் முதலில் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் என்னிடம் இப்பிரேரணையை சமர்ப்பிக்க அனுமதி பெற்றுள்ளார் என உறுப்பினர் ஜெமீலிடம் கூறியுள்ளார்.

இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த மாகாண உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் நான் தான் முஸ்லிம் காங்கிரஸின் குழுக்களின் தலைவர் என்ற ரீதியில் முதல் இப்பிரேரணையைக் சபையில் சமர்ப்பிப்பதற்கு எனக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என கோரியுள்ளார். இதனை ஏற்க மறுத்துள்ள தவிசாளர், இரு கட்சிக்காரர்களும் கலந்துபேசி ஒரு முடிவினை எடுக்கும் படி கேட்டுள்ளார்.

இதனடிப்படையில் ஆளும் கட்சிக் குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் தேசிய காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் இப்பிரேரணையை முதலில் தவிசாளரிடம் சமர்ப்பித்திருக்கின்றார் எனவே இதனை சபையில் அவர் தான் முதலில் சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கேட்டுள்ளார். இல்லை நான் தான் முஸ்லி;ம் காங்கிரஸின் குழுக்களின் தலைவர் என்ற ரீதியில் முதலில் இப்பிரேரணையைக் சபையில் சமர்ப்பிப்பதற்கு எனக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் கோரியுள்ளார். இதனால் இருசாராருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் பின்னர் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.

அதாவது இப்பிரேரணையை முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் சபையில் சமர்ப்பித்து பிரேரிக்க அதனை மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆமோதிப்பதாக முடிவு எட்டப்பட்டு தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. தவிசாளரோ பிரேரணையை சபையில் சமர்ப்பிக்கலாமே தவிர அதனை இன்று சபையில் விவாதிக்க முடியாது எனவும் இப்பிரேரணை கடைசியில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

இதனை இருசாராரும் ஏற்றுக்கொண்டதன் பின்னர் சபை தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு கூடியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர் இனியபாரதி தனது கன்ணி உரையை நிகழ்த்தும் தருவாயில் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் குறுக்கிட்டு சபை குழப்பி விட்டு வெளியேறியுள்ளார். 

அதனைத் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையின் செங்கோலை  எடுத்துச் சென்றுள்ளதால் சபையில் அமளி துமளி ஏற்பட்டுள்ளது. இதனால் சபையினை தவிசாளர் ஆரியவதி கலப்பதி எதிர்வரும் 16ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாக தெரியவருகிறது.

இவர்களின் ஒற்றுமையின்மையால் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளை கிழக்கு மாகாண சபையில் கூட பேச முடியாத பரிதாப நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

 
Top