முஸ்லிம்கள் மீதான பொதுபல சேனாவின் காட்டுமிராண்டித்தன செயற்பாடுகளை கண்டிக்கும் தீர்மானம் ஒன்று, இன்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனை முன்மொழிந்து அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி உரையாற்றுகையில்;
“அன்மையில் அளுத்கம பேருவள பிரதேசங்களில் பொதுபல சேனா அமைப்பினால் காட்டுமிராண்டித்தனமான முறையில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தாக்குதலால் அப்பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் வீடுகள் கடைகள்,மற்றும் உடமைகள் பெருமளவு தேசப்படுத்தப்பட்டுள்ளதுடன் நமது சகோதரர்களின் விலை மதிப்பற்ற உயிர்களும் காவு கொள்ளப்பட்ட துர்ப்பாக்கிய சம்பவம் நமக்கெல்லாம் பேரதிர்ச்சியைத் தந்தது.
நாட்டில் 3 தசாப்த காலமாக பீடித்திருந்த கொடூர பயங்கரவாதம் எமது ஜனாதிபதி அவர்களின் தலைமையில் முற்றுமுழுதாக நீக்கப்பட்டு மூவினங்களும் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் அதனை சகிக்க முடியாத பொதுபல சேனாஅமைப்பு இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தி நாட்டை மீண்டும் பாதாளத்திற்குள் தள்ள முற்படுகின்றது.
அன்மையில் திருகோணமலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உரையின் போது… இனங்களுக்கிடையில் ஏற்படும் முறுகல் நிலை பாரிய யுத்தத்திற்கு சமமானது என தெரிவித்திருந்தமையை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூற விரும்புகின்றேன்.
இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படுவதற்காக அனைத்துத் தரப்பினரும் உழைக்குமாறும் அதற்காய் பிரார்த்திக்குமாறும் வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அவர்களுக்கு கணிசமான முஸ்லிம்களும் அவரின் வெற்றிக்காக வாக்களித்துள்ளனர். அதேவேளை நாட்டின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இவ்வாறான அசாதாரண சூழ்நிலைகள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரும் மகஜர் ஒன்று எமது மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களின் இணக்கத்துடன் தீர்மானமாக நிறைவேற்றி ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பவுள்ளதாகவும் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top