நாட்டில் அமைதியின்மையைத் தோற்றுவிக்க சில அமைப்புக்கள் நாளை வௌ்ளிக்கிழமை மேற்கொள்ளவுள்ள முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டாமென முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோன் தெரிவித்தார்.
 
இன்று பிற்பகல் தகவல் ஊடக அமைச்சில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வராந்த ஊடகவியலளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
 
அளுத்கம – பேருவளைப் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை அமைதியின்மையைத் தோற்றுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட சில அமைப்புக்கள் ​தயாராகிக்கொண்டிருப்பதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளன.
 
இது தொடர்பில் எம்.ஆர்.ஓ. என்ற அமைப்பு துண்டுப்பிரசுரங்கள், குறுந்தகவல்கள் மற்றும் பேஸ் புக் மூலம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
 
இது இலங்கையில் பதிவு செய்யப்படாத ஒரு போலியான அமைப்பாகும். எனவே இவ்வாறான போலி அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கு இணங்கி நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த வேண்டாம் எனவும் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட முஸ்லிம்கள் ஒத்ததுழைப்பு வழங்க வேண்டும் என்றும் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்தார். 

கருத்துரையிடுக

 
Top