உள்ளூராட்சி சபைகளின் எல்லைகளை நிர்ணயிக்கும் வகையில் நியமிக்கப்பட்ட தேசிய எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படும்என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட இந்தக்குழு நகர் வரைபொன்றை தயாரித்திருப்பதாகவும் அதனை ஆய்வு செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 23/2 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
2015ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் தேசிய குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்படும். உள்ளூராட்சி சபை தேர்தல்களுக்கு இதனால் எந்தப்பாதிப்பும் ஏற்படாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தேசிய எல்லை நிர்ணய குழு 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைக்கப்பட்டது. மாவட்ட ரீதியில் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இந்தக் குழுவின் ஆயுட்காலம் மேலும் 9 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது. இக்குழு நகல் வரைவொன்றை தயாரித்துள்ளது. இதனை ஆய்வு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணயத்தின் போது பல்வேறு பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்க வேண்டுமென்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்றை அமைப்பது தொடர்பிலும் ஆராய்ந்து வருகிறோம்.
தேசிய எல்லை நிர்ணயம் தொடர்பான இறுதி அறிக்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை பாதிக்காத வகையில் வெளியிடப்படும். அவ்வாறு இயலாது போனால், ஆட்சிக்காலம் முடிந்த உள்ளூராட்சி சபைகளில் கால எல்லையை நீடிக்க அமைச்சருக்கு அதிகாரம் இருப்பதாகவும் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா மேலும் தெரிவித்தார்.
எல்லை நிர்ணயம் தொடர்பான செயற்பாடுகளை காலதாமதப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கருத்துரையிடுக

 
Top