அம்பாறை மாவட்டம், மத்தியமுகாம் பிரதேசத்தில் பூப்பெய்த சடங்கு வீட்டில் உணவு மற்றும் ஐஸ்கிறீம் உட்கொண்ட 95 பேர் ஒவ்வாமையினால் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (3) சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக மத்தியமுகாம் பொலிஸார் தெரிவித்தனர்.


இதுபற்றி தெரியவருவதாவது, 

மத்தியமுகாம் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான நேற்று பிற்பகல் இடம்பெற்ற பூப்பெய்த சடங்கு வீட்டில் உறவினர்கள், நண்பர்களுக்கு சமைக்கப்பட்ட உணவு மற்றும் ஐஸ்கிறீம் என்பன பரிமாறப்பட்டன. இதனை உட்கொண்ட பலர் இரவு 6.30 மணியளவில் வாந்தியும் மயக்கமும் அடைந்ததையடுத்து உடனடியாக மத்தியமுகாம் வைத்தியசாலையில் 32 பேரையும் கல்முனை வடக்கு வைத்தியசாலையில் 28 பேருமாக சிறுவர் பெண்கள் உட்பட 60 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் மத்தியமுகாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 9 பேரை மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.இதில் உள்ளுர் உற்பத்தியான ஐஸ்கிறீம் உட்கொண்ட பலபேர் இந்த உபாதைகளுக்கு உள்ளாகியிருப்பதாகவும் ஐஸ்கிறீம் திரவத்தன்மையாக இருப்பதாகவும் இதனாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பலபேர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, விருந்துபசார நிகழ்வின் போது பரிமாறப்பட்ட உணவு ஒவ்வாமை ஏற்பட்டதால் 63 பேர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்களும் பெண்களும் உள்ளடங்கி உள்ளதாகவும் இவர்களுக்கு தேவையான சிகிச்சை தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்தியர் டாக்டர் ஐ.எல்.ஜலால்தீன் தெரிவித்தார்

இதுதொடர்பான விசாரணைகளை மத்தியமுகாம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

 
Top