கல்முனை கடற்கரைப்பள்ளி கொடியேற்று விழா வளாகத்தில் அமைந்துள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் தீன்பண்டங்கள் விற்பனை நிலையங்களில் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு எரியூட்டி அழிக்கப்பட்டுள்ளன.
கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் தலைமையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்.ரயீஸ் அவர்களின் மேற்பார்வையில் இத்திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி.பேரம்பலம் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான ஜே.எம்.நிஸ்தார், எம்.எம்.எம்.பைலான், எம்.ராமச்சந்திரன், ஏ.எல்.எம்.ஜரீன் ஆகியோரும் இப்பரிசோதனை நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டு- பொது மக்களின் நுகர்வுக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் அவற்றின் உரிமையாளர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
அதேவேளை இவ்வாறு கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்கள் கல்முனை தெற்கு சுகாதார வைத்த்திய அதிகாரி அலுவலக வளாகத்தில் வைத்து எரியூட்டி அழிக்கப்பட்டன.
தற்போது கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகையின் 192 ஆவது கொடியேற்று விழா இடம்பெற்று வருவதும் அதில் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


இதனைக் கருத்திற் கொண்டு பொது மக்களின் நலன்களை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறு திடீர் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top