வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமையும் எதிர்ப்பது என்றே அர்த்தப்படும் என தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி  கசினோ என்ற பதம் உள்ளடக்கப்பட்டிருந்தால் எதிர்த்து வாக்களித்திருப்போம் எனவும் தெரிவித்தார். 

அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டு நிறைவேறியுள்ள இக்கட்டளை தொடர்பில் எமக்கு சந்தேகம் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்களின் கீழான கட்டளை வாக்கெடுப்பில் மு.கா. கலந்து கொள்ளாமை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். 

அது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இவ் கட்டளைக்கு நாம் வாக்களிக்காது இருந்தமை இதனை ஆதரிப்பதற்காகவோ அரசாங்கத்தை வலுப்படுத்தவோ அல்ல. முன்னர் இக்கட்டளை கொண்டு வந்த போது கசினோ என்ற பதத்தினை வலுப்படுத்தியிருந்தனர். எனினும் இம்முறை கசினோ என்ற பதம் அகற்றப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக வேறு மாற்று வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே நாம் வாக்களிக்காது இருந்தோம். 

வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதிருந்தமையும் எதிர்ப்பு என்றே அர்த்தப்படும். இதில் எம்மை விமர்சிக்கும் அளவில் பெரிய விடயமெதுவும் இல்லை. அதே போல் கசினோ என்ற பதம் குறிப்பிடப்பட்டிருக்குமாயின் நாம் நிச்சயமாக இதனை எதிர்த்தே வாக்களித்திருப்போம். கசினோ உள்ளடக்கிய சட்ட மூலம் கொண்டு வரப்படுமாயின் அதனை ஆதரிக்கப் போவதில்லை என்ற கருத்தினை ஆரம்பம் தொடக்கம் ஊடகங்களில் தெரிவித்து வந்தோம். இப்போதும் அதே முடிவிலேயே இருக்கின்றோம். சமூகத்தினை சீரழிக்கும் நோக்கம் எப்போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இருந்ததில்லை. 

மேலும் இக்கட்டளை நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் இக்கட்டளையில் எமக்கு சந்தேகம் உள்ளது. செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்களின் கீழான கட்டளை என இதனைக் கொண்டு வந்தாலும் இது எந்த அளவிற்கு உண்மையென்பது கேள்விக்குறியே. அதி சொகுசு ஹோட்டல்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவற்றில் சூதாட்டம் தவிர்க்கப்படுவதென்பதும் நம்பக்கூடிய வகையில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

 
Top