இலங்கையின் மத்திய கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் சுற்று நிருபங்கள் சிங்களத்தில் வெளியிடப்படுவது குறித்து மத்திய கல்வி அமைச்சுக்குச் சென்ற இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.சரா.புவனேஸ்வரன் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர், உதவிச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 07.04.2014 அன்று இசுருபாயாவில் உள்ள மத்திய கல்வி அமைச்சில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. உபாலி மாரசிங்க, உதவிச் செயலாளர் செல்வி. கொடிப்புலி, கல்வி அமைச்சின் தமிழ் பிரிவுக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.முரளீதரன் ஆகியோரோடு சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.சரா.புவனேஸ்வரன், துணைப் பொதுச் செயலாளர் திரு.எஸ்.தனஞ்செயன் ஆகியோர் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
அப்போது அதிபர்களின் பதவியுயர்வுகள் தொடர்பான சுற்று நிருபம், கல்வியியலாளர்களின் சேவை பிரமாணக் குறிப்பு போன்ற பல சுற்று நிருபங்கள் சிங்களத்தில் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பிலும் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 13/2014, 06/2014, 07/2014, 03/2014, 02/2014 ஆகிய இலக்கங்களைக் கொண்ட சுற்றறிக்கைகள் தனிச் சிங்களத்தில் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த மேலதிக செயலாளர் திரு. உபாலி மாரசிங்க மொழிமாற்றம் செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்காக வருந்துவதாகவும் மிகவிரைவில் அதனை மொழிமாற்றம் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
எதிர்வரும் 22.04.2014 அன்று கௌரவ பிரதிக் கல்வி அமைச்சர் திரு.மோகன்லால் கிரேரு அவர்களை சங்கத்தின் தாய்ச்சங்கப் பிரதி நிதிகள் சந்திக்கவுள்ளதாகவும் அப்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top