இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருக்கும் கிண்ணியா வைத்திய சாலைக்கு சொந்தமான வைத்தியர்களின் உத்தியோக பூர்வ விடுதிகளை வைத்திய சாலைக்கு மீள ஒப்படைக்குமாறு  கிழக்கு மாகாண  சுகாதார விளையாட்டு தகவல் தொழில் நுட்ப கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடுதிகளை இராணுவத்தின் பிடியில் இருந்து மீட்டுத்தருமாறு கிழக்குமாகாண  அமைச்சர் மன்சூர் பொருளாதார பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமைக்கு கடிதம் எழுதியுள்ளார் . அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது 

திருகோண மலை மாவட்டத்தில் சிறு இடப்பரப்பை கொண்ட பிரதேசத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடியிருக்கும் கிண்ணியா பிரதேச மக்களுக்கு  சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக  ஸ்தாபித்திருக்கும் வைத்திய சாலை  கிண்ணியா தள  வைத்திய சாலையாகும். சுனாமி அனர்த்தம் மற்றும் மூன்று தசாப்த காலமாக நடை பெற்று வந்த  யுத்த சூழ்நிலையின் காரணமாக  இவ்வைத்திய  சாலைக்குரிய  அநேகமான பௌதீக வளங்கள் அழிந்து போய் விட்டன . சாதாரண சூழ்நிலையில்  துரிதமாக  அபிவிருத்தி அடைந்து வரும்  கிண்ணியா பிரதேசத்துக்கு சொந்தமான  தள வைத்திய சாலையை  மிகப்பயனுள்ள சுகாதார சேவை வழங்கும் இடமாக ஸ்தாபிப்பதற்கு கிழக்கு மாகாண  சுகாதார அமைச்சர் என்ற ரீதியில்  நடவடிக்கை எடுத்து வந்த போதிலும்  கிண்ணியா வைத்தியசாலைக்கு வரும்  விஷேட  வைத்திய அதிகாரிகள் மற்றும்  தாதியர்களுக்குமான  தங்குமிட  வசதிகளை வழங்க முடியாதிருப்பதால்  பல்வேறு பிரட்சினைகளை எதிர் நோக்கவேண்டியதாக உள்ளது. அதாவது  கிண்ணியா தள வைத்தியசாலைக்கு  சொந்தமான தாதியர்களுக்கான உத்தியோக பூர்வ விடுதிகள் சுனாமி அனர்த்தத்தின் பின்னர்  இலங்கை கடற் படையினராலும் ,மக்களை பயமுறுத்திய மர்ம மனிதன் (Grees Man )  சம்பவத்தின் பின்னர்  வைத்தியர்களின் உத்தியோக பூர்வ விடுதிகள்  இலங்கை இராணுவத்தினராலும் கைப்பற்றப்பட்டது.

இவ்விடுதிகளை மீண்டும் கிண்ணியா தள  வைத்திய  சாலையிடம்  ஒப்படைக்குமாறு கிண்ணியா தள  வைத்திய சாலையின்  வைத்திய அத்தியட்சகர்  எனது செயலாளரிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.

அதன் படி  இது சம்பந்தமாக எனது செயலாளரினால்  கிழக்கு மாகாண கடற்படையின் கட்டளையிடும்  அதிகாரிக்கு  தெரியப் படுத்திய போதிலும்  இதுவரை எமக்கு  ஆரோக்கியமான பதில் எதுவும் கிடைக்கவில்லை .

கிண்ணியா தள வைத்திய சாலைக்கு தேவையான  விஷேட  வைத்தியர்கள் ,தாதியர்களை  அமைச்சினால் ஆட்சேர்ப்பு செய்வதற்கு  நடவடிக்கை எடுத்து வந்த போதிலும்  மேற்படி வைத்தியர்களுக்கும் ,தாதியர்களுக்கும் தங்குமிட வசதிகள் வழங்க முடியாதிருப்பதால்  அவ்வைதியர்களையும் ,தாதியர்களையும்  கிண்ணியா பிரதேசத்தில் தங்க வைக்க முடியாததனால்  பல நடைமுறை பிரட்சனைகள் ஏற்பட்டுள்ளன .

ஆகவே தற்போது கிண்ணியா தள  வைத்திய சாலைக்கு  சொந்தமான பாதுகாப்பு தரப்பினர்  பயன்படுத்திவரும் அரச விடுதிகளை  பெற்றுக் கொள்ள வேண்டிய  அவசர தேவை  ஏற்பட்டுள்ளது. திருகோணமலை  மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக  தாங்கள் செயற்பட்டு வருவதால்  இது விடயமாக  தங்களால் காத்திரமான பங்களிப்பை செய்ய முடியும்  எனக்கருதுவதாலும்  மேற்படி விடுதிகளில் இருக்கும்  பாதுகாப்பு தரப்பினரை  வேறு பொருத்தமான இடத்தில குடியமர்த்தி விட்டு  மேற்படி வைத்தியர்கள் , தாதியர்களுக்கான  விடுதிகளை  துரிதமாக விடுவித்து தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் என  கிழக்கு மாகாண  சுகாதார அமைச்சரினால் திருகோணமலை அபிவிருத்தி குழு தலைவரும் பொருளாதார பிரதி அமைச்சருமான  சுசந்த புஞ்சி நிலைமைக்கு எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top