அம்பாறை மாவட்ட தமிழ் சிவில் சமூகங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக கல்முனையில் பேரணியொன்று இன்று இடம்பெற்றது.
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமாகி கல்முனை நகர் ஊடாக கல்முனை தரவைக் கோவில் வரை சென்று பின்னர் அங்கிருந்து கல்முனை தமிழ் பிரதேச செயலகம் வரை இந்த பேரணி சென்றது.
இதன்போது கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் கே.லவநாதனிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதிக்கு ஆதரவான கோஷங்களும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட தமிழ் சிவில் சமூகங்களின் ஒன்றியத்தின் செயலாளர் கே.ரமேஷ்,
"இந்த பேரணியானது ஜெனீவா பிரரேணைக்கு எதிரானது அல்ல. சுமார் 30 வருட கால யுத்தத்தாலும் 2004ஆண்டு ஏற்பட்ட சுனாமியாலும் பாதிக்கப்பட்ட தமிழ் சமுகத்தின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு செயற்படும் ஜனாதிபதிக்கு தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை தெரிவிப்பதன் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன்  கைகோர்த்து பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதே ஆகும்.

இப்பிரதேசத்தில் தமிழ் கூட்டமைப்பினர் பிழையான கருத்துக்களைக் கூறி தங்களது பேரணியில் இணைய விடாமல் தமிழ் மக்களை தடுத்து வந்தனர். எனினும் மக்கள் உண்மையைப் புரிந்துகொண்டு தங்களுடன் ஒன்றி ணைந்துள்ளனர். தமிழ் பிரதேசங்களில் அபிவிருத்தி குன்றிப்போனதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் எதிர்கட்சி அரசியலே காரணம்" என்றார்.
இதே வேளை இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலர் சமுர்த்தி உதவி பெறுபவர்கள் என்றும் வற்புறுத்தலின் பேரில் அவர்கள் அழைத்து வரப்பட்டதாகவும்  மற்றும் மகளிர் தினம் கொண்டாட வருமாறு அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தகவல் திணைக்களத்தில் இருந்து வருகை தந்த ஊடகவியலாளர்கள் ஜெனீவா தொடர்பாக கருத்துக்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்த்து கொழும்பில் இருந்து வருகை தந்ததாகவும் அவர்களுக்கும் ஏமாற்றம் கிடைதாதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இன்று நடை பெற்ற இந்த பேரணியின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெற்றிகிடைதுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

 
Top