கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்

பெற்ற இச்சுதந்திரக் காற்றினை சுவாசித்து இலங்கையர் என்ற ரீதியில் நாம் அனைவரும் இன மத பேதமின்றி சுபீட்சமாக வாழ வழிசமைப்போமாக என அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளரும்,கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையில் இன்று (2014-02-04) காலை ஆரம்பமான சாரணியர் ஒருநாள் பயிற்சிப் பட்டறையின் முடிவின் போது இந்நிகழ்வுக்கு  பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில்  அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்க ஆணையாளர் ஐ.எல்.ஏ.மஜீத் மற்றும் முன்னாள் அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்க ஆணையாளர் எம்.ஐ.முஸ்தபா. அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்க பயிற்சி ஆணையாளர் கே.எம்.தமீம் சாரணர் குழுத்தலைவர் எம்.ஏ.சலாம், ஏ.ஆர்.எம்.யூசுப் மற்றும் இணைப்பாடவிதான ஆசிரியர் யூ.எல்.எஸ்.ஹமீட் போன்றோரும் பங்கு கொண்டிருந்தனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பறக்கத்துள்ளாஹ்  
நாம் இலங்கையர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட வேண்டும். தேசப்பற்றுள்ள, தாய்நாட்டில் அதிக அக்கறை கொண்டவர்களாக இன்றும் முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர்.
இலங்கையின் வரலாற்றில் முஸ்லிம்களும் ஓர் பூர்விக சமூதாயமாக இருந்து வருவது எழுதப்படாத வரலாறாகிறது. ஆதிகாலம் தொடங்கம் இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் வரலாறு மற்றும் அடையாளங்கள்  ஆதிக்க சமூகத்திரால் அழிக்க முற்பட்டுவருவது சாதாரணமாகின்றது.
மன்னர்களாலும், அரசர்களாலும் ஆதிக்க சக்தியின் பின்னணியில் எழுதப்பட்ட வரலாறுகளில் முஸ்லிம்களின் வரலாறுகளை அதிலிருந்து கிள்ளி  எறிவதையே காணமுடிகிறது.
இலங்கை நாட்டில் பாதம் பதித்த ஆதம் (அலை) அவர்களின் வாரிசுகளாக இலங்கை முஸ்லிம்கள் இருந்து வருகின்றார்கள். முஸ்லிம்கள் வாழ்ந்து சென்றதற்கான தடையங்கள் இன்மையால் இவைகளை எம்மால் நிரூபித்துக் காட்ட முடிவதில்லை. சுதந்திரத்திற்கு முதல் தொடக்கம் இன்றுவரையிலான சிங்கள ஆட்சியாளர்களுடன் முஸ்லிம் தலைவர்களும் ஒன்றிணைந்தே செயற்பட்டிருக்கின்றனர்.
பிரித்தானியர் 1796ம் ஆண்டு இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதியைக் கைப்பற்றி ஆட்சியமைத்த பின்னர் கண்டிராச்சியத்தின் ஒரு பகுதியான  இருந்த கிழக்குக் கரையோரத்தைக் கைப்பற்ற 1804ம் ஆண்டு முனைந்தபோது கிழக்கு மாகணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் கண்டி மன்னனுக்கு ஆதரவாக செயற்பட்டிருக்கின்றனர்.
தனது ஆட்சியை எதிர்த்த பிரித்தானிய அரசு செயலாளர் தமது படையினரை எதிர்த்த முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் சேர்ந்து கொண்ட அனைவரையும் ராஜா துரோகிகள் என 1804ம் ஆண்டு பிரகடனப்படுத்தியதும், இச்செய்தி பிரித்தானியரின் 1803-4ம் நீதி நிர்வாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதும் வரலாறாகிறது.
சுதந்திரத்திற்குப் பின்னரும் இலங்கையை ஆட்சி செய்த டீ.டிஸ். சேனநாக்க, எஸ்.டபிள்யூ. பண்டாரநாயகாக, சிறிமாவோ பண்டாரநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்தன, ஆர். பிரேமதாச, ரீ.பி. விஜயதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்கா, மஹிந்த ராஜபக்ஷ வரையானவர்களுடன் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பக்கபலமாக இருந்து வருக்கின்றார்கள்.
1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து சுமார் 33 வருடங்களுக்குப் பின்னர் தமிழ் ஆயுதக்குழுக்கள் உருப்பெற்று சுதந்திர இலங்கையின் ஆட்சியை குழைத்துக் கொண்டு செயற்பட்டு வந்தன.
இவ்வாயுதக்குழுக்கள் சுமார் 30 வருடகாலமாக செயற்பட்டு பல வழிகளில் இலங்கையின் அமைதியைச் சீர்குலைத்து செயற்பட்டன. இதன் உக்கிரங்கள் பல பாரிய விளைவுகளை தோற்றுத்ததும் வரலாறாகிறது.
2009ம் ஆண்டு எல்.ரீ.ரீ.ஈ. என்ற இரக்கமற்ற ஆயுதக்குழு அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் முற்றாக ஒழிக்கப்பட்டு 30 வருடங்களுக்குப்பின்னர் இலங்கை நாடு மீண்டும் மறு சுதந்திரம் பெற்றது என கூறிக் கொள்ள முடியும்.
இன்று எமது நாட்டுக்கு சுதந்திரக்காற்று வீசத்தொடங்கிய 66 வது வயது.
இச்சுதந்திரக் காற்றினை சுவாசித்து இலங்கையர் என்ற ரீதியில் நாம் அனைவரும் இன மத பேதமின்றி சுபீட்சமாக வாழ வழிசமைப்போமாக! என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது சாரணியர் ஒருநாள் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட சாரணர்களுக்கு சான்றிதல்களை வழங்கி வைத்ததோடு,  கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் சாரணர் அணிக்கு ஒரு தொகுதி சாரணர் தண்டங்களினையும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் அன்பளிப்புச்செய்தார்.கருத்துரையிடுக

 
Top